நாம் உணவை உட்கொள்ளும்போது, கணையம் இன்சுலினைச் சுரக்கிறது. இதுவே ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், இந்த அளவு மிதமிஞ்சினால், நமது ஆற்றல் அளவு, பசி உணர்வு, நீண்டகால வளர்சிதை மாற்ற ஆரோக்கியம் என அனைத்துமே எதிர்மறையாகப் பாதிக்கப்படும். ரத்த சர்க்கரை திடீரென மிக அதிகமாக உயரும்போது, உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் உள் அழற்சி கூட அதிகரிக்கக்கூடும்.
'Diabetes, Obesity and Metabolism' இதழில் வெளியான ஓர் ஆய்வின்படி, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவே அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொண்டால், ரத்த குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டை மீறி உயர்ந்துவிடும் எனக் கூறப்பட்டுள்ளது.
'Foods' இதழின் தகவல்படி, ரத்த சர்க்கரை திடீரென உயர்வதைத் தடுக்க, கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும். எனவே, தினசரி உணவில் வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, லெட்யூஸ், பாலக்கீரை போன்ற உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.