
நல்ல ஆரோக்கியத்திற்கு எதை செய்கிறோம் என்பதை விட எதை செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பது முக்கியம். உண்மையில் 40 வயதுக்கு பின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த வயதில் 20, 30 வயதுகளில் பின்பற்றிய பழக்கவழக்கங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்காது. ஒவ்வொரு மனிதனும் 40 வயதில் இயற்கையாகவே சில மாற்றங்களுக்கு உட்படுகிறான். இதய நோய், நீரிழிவு, மூட்டு வலி போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். இதுவரை நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தாலும், இனி அப்படி இருக்காதீர்கள். நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க 40 வயதில் உடனடியாக செய்ய வேண்டிய 5 பழக்கங்களை இங்கு காணலாம்.
வயதாகும்போது வேலை, குடும்ப கடமைகள் அதிகமாகின்றன. இதனால் மனதை இலகுவாக திரை நேரத்தை சிலர் அதிகப்படுத்துகின்றனர். மணிக்கணக்கில் டிவி முன் அமருவது, செல்போன் பார்ப்பது என நேரத்தை செலவிடுகின்றனர். சிலருடைய அலுவலக வேலையே அதிக நேரம் அமர்ந்திருப்பதாக தான் அமைகிறது. 40 வயதை நீங்கள் தொடும்போது இது பெரிய அச்சுறுத்தலாகும். நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் இதய நோய்கள், எடை அதிகரிப்பு சர்க்கரை நோய், மூட்டு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உருவாகிறது. வயதாகும் போது உடலுடைய வளர்ச்சிதை மாற்ற விகிதமும் குறைகிறது. இதனால் குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறையாவது அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்திருப்பது, நடப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுந்து சில நிமிடங்கள் நடந்து விட்டு அமருவது நல்லது. வாரத்தில் மொத்தமாக 150 நிமிடங்கள் குறைந்தபட்சம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடுவதாக இருக்கலாம். வலிமை பயிற்சி பயிற்சிகள் 3 நாட்கள் குறைந்தபட்சம் செய்ய வேண்டும்.
40 வயதை அடைந்த பின்னர் உங்களுடைய உணவு தேர்வுகள் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக அமைய வேண்டும். ஆரோக்கியம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது எடை அதிகரிக்கும். கொழுப்பு அளவு உயர்வதோடு, இரத்த சர்க்கரை போன்ற நோய்களும் வரலாம். அதிகமான உப்பு, சர்க்கரை அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். கெட்ட கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அன்றாட உணவில் காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள், புரதங்கள், நல்ல கொழுப்புகள் எடுத்து கொள்ள வேண்டும்.
மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தொழிலையும் குடும்ப பொறுப்புகளையும் திறம்பட கையாள மன ஆரோக்கியம் முக்கியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் ஆகியவை 40 வயதுகளில் ஏற்படுவது இயல்பு. அதை அலட்சியம் செய்யாமல் மீண்டு வர வேண்டும். ஏனென்றால் 40 வயதுக்கு பின் மன அழுத்தம் இருந்தால் இதய நோய், இரத்த அழுத்த பிரச்சினைகள், தூக்கக் கோளாறுகள் வரக் கூடும். தினமும் தியானம், யோகா, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் செய்து மனதை அமைதிப்படுத்த வேண்டும். உங்களால் சமாளிக்க முடியாத தருணத்தில் தயங்காமல் மனநல ஆலோசனை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
தூக்கத்தை தவிர்ப்பது உடலுக்கு பல்வேறு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நல்ல தூக்கம் தான் ஒருவருடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளம் ஆகும். 40 வயதை கடக்கும்போது பொறுப்புகள் அதிகரிக்கும்; அதற்காக உங்களுடைய தூக்கத்தை தியாகம் செய்யக்கூடாது. சரியாக தூங்காவிட்டால் இதய நோய்கள், உடல் பருமன், சர்க்கரை நோய், ஞாபக மறதி உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படும். 40 வயதிற்கு பின் ஏழு முதல் ஒன்பது மணி நேரம் ஆழ்ந்த தூக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களை பல நோய்களிலிருந்து பாதுகாக்கும்.
நீங்கள் 40 வயதை தொட்டாலே அடிப்படை மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது. நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை தவிர்க்க வேண்டாம். உங்களுடைய 40 வயதில் இருந்து வருடத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைகளை செய்வது அவசியம். இப்படி பரிசோதனை செய்வதால் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்பே சில நோய்களை கண்டறிய முடியும். உடல் பரிசோதனைகளில் இரத்த அழுத்தம், கொழுப்பு, இரத்த சர்க்கரை அளவு, புற்றுநோய் பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்வார்கள். இப்படி ஆண்டுக்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது ஆரம்பத்திலேயே நோயை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
மேலே சொன்ன இந்த ஐந்து பழக்கங்களையும் நீங்கள் சரியாக பின்பற்றும் போது உங்களுடைய ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவியாக இருக்கும்.