
சீனாவில் இருந்து வெளியான கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து இன்னும் உலகம் மீண்டு வராத நிலையில், தற்போது அடுத்தடுத்த வைரஸ்கள் பரவி வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் வௌவால்களின் சிறுநீரகங்களில் இருந்து, இதற்கு முன் அறியப்படாத 20 வைரஸ்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்களில் இரண்டு வைரஸ்கள் மனிதர்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மனிதர்களில் மூளை வீக்கம், சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் நிஃபா மற்றும் ஹென்ரா வைரஸ்களுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையை இந்த இரண்டு வைரஸ்களும் கொண்டுள்ளன.
வௌவால்களில் இருந்து பரவும் வைரஸ்கள் குறித்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 2017 முதல் 2021 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், யுனான் மாகாணத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் இருந்து 142 வௌவால்களின் சிறுநீரக திசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதை ஆய்வு செய்த போது சிக்கலான நுண்ணுயிர் அமைப்பு மற்றும் தொற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 22 வைரஸ்களும் அடங்கும். 22 வைரஸ்களில் 20 வைரஸ்கள் இதற்கு முன் அறியப்படாத அறிவியலுக்கு முற்றிலும் புதுமையான வைரஸ்கள் ஆகும். அவற்றிற்கு யுனான் பேட் ஹெனிபா வைரஸ் 1 மற்றும் யுனான் பேட் ஹெனிபா வைரஸ் 2 எனப் பெயரிடப்பட்டுள்ளன. இந்த வைரஸ்கள் நிஃபா மற்றும் ஹென்ரா வைரஸ்களுடன் 71% பொருந்திப் போகின்றன.
ஹெனிபா வைரஸ்கள் சாதாரண வைரஸ்கள் கிடையாது. இவை விலங்குகள் மற்றும் மனிதர்களின் மூளையை கடுமையாக பாதிக்கும் திறன் கொண்டவை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வைரஸ்கள் மூளை வீக்கம், சுவாச நோய்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் 75% வரை இறப்பு உறுதி என கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பரவிய ஹென்ரா வைரஸ்களும், வங்கதேசத்தில் பரவிய நிஃபா வைரஸ்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. அந்த வகையில் அந்த வைரஸ்களுடன் ஒத்துப்போகும் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ்கள் சிறுநீரகங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இந்த அச்சம் மேலும் அதிகமாகி உள்ளது. ஏனென்றால் சிறுநீரை உற்பத்தி செய்வதில் சிறுநீரகங்கள் ஈடுபடுகின்றன. இதனால் வௌவால்களின் சிறுநீர் மூலமாக இந்த வைரஸ்கள் வேகமாக பரவ வாய்ப்புள்ளது.
இந்த வௌவால்கள் மனித குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பழத் தோட்டங்களில் கூடுகட்டி வாழ்வது தெரியவந்துள்ளது. எனவே இந்த பகுதிகளில் உள்ள பழங்கள் மற்றும் நீர்நிலைகளில் வௌவால்களின் சிறுநீர் தாக்கம் இருக்கலாம் என்றும், இதன் மூலமாக இந்த வைரஸ்கள் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குள் சென்று மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ்களால் இதுவரை எந்த நோய் தொற்றும் ஏற்படவில்லை. இந்த கண்டுபிடிப்புகள் எந்த ஒரு சுகாதார அவசர நிலையும் குறிக்கவில்லை. இதுவரை அடையாளம் காணப்பட்ட ஹெனிபா வைரஸ்கள் எந்த மனிதர்களையும் பாதித்ததாக தரவுகள் இல்லை. இது மனிதர்களுக்கு பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
ஆனால் வௌவால்களிடமிருந்து மனிதர்கள் எவ்வாறு விலகி இருக்க வேண்டும் என்பதையும், வௌவால்களால் மனிதர்களுக்கு என்ன மாதிரியான பின் விளைவுகள் ஏற்படலாம் என்பதையும் விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும் கோவிட் 19 தொற்றுக்குப் பின்னர் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ்கள், எதிர்காலத்தில் புதிய நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் குறித்தும், அதை கண்காணிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கிறது இந்த வைரஸ்கள் மனித அல்லது விலங்கு செல்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிய இன்னமும் ஆய்வுகள் தேவை என்று சிட்னி பல்கலைக்கழக கால்நடை மருத்துவரும் வனவிலங்கு நோய் சூழலியல் நிபுணர் அலிசன் பீல் கூறியுள்ளார்.