நமது பாரம்பரிய உணவுமுறைகளில் பாசிப்பயறுக்கு முக்கிய இடம் உண்டு. பருப்பு வகைகள் அனைத்துமே நமக்கு ஆரோக்கிய நன்மைகளை கொடுப்பவை என்றாலும், பாசிப்பயறு அனைத்து பருப்பு மற்றும் பயறு வகைகளில் முக்கிய இடம் பிடிக்கிறது. குறிப்பாக, இதில் உள்ள நார்சத்து மற்றும் கலோரிகள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், பச்சைப்பயறில் இரும்பு, புரோட்டீன், கார்போஹைட்ரேட், பைபர், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் கொண்ட சத்தான பயறு என்பதால், சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கும் உகந்த உணவாகும். இது சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் உள்ளது, மேலும், கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சருமத்திற்கும் நல்லது:
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகுக்கும் பாசிப்பயறு உதவுகிறது. பாசிப்பயறு மாவு தேய்த்துக் குளித்தால் சருமம் அழகாகும். பொடுகுத் தொல்லை இருந்தால், தலைமுடியில் பாசிப்பயறு மாவு கொண்டு அலசினால், முடி பளபளக்கும்.
கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது:
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. எளிதில் ஜீரணமாகும் பாசிப்பயறு என்பதால், கர்ப்பிணிகள் தினசரி அடிப்படையில் வேகவைத்த பாசிப்பயிறை உண்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்துகள் சென்று சேரும்.
மன அழுத்தம் உள்ளவர்கள்:
மன அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு தினசரி பாசிப்பருப்பை உட்கொள்வது, மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது:
பாசிப்பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடல் பலவீனமாக இருப்பவர்கள், பாசிப்பருப்பை சாப்பிட்டால் உடல் வலுவாகும்.