
சமையலறையில் அதிக நேரம் செலவிடாமல், அதேசமயம் சுவையான ஒரு உணவைச் சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான சரியான தேர்வுதான் இந்த ஒன் பாட் ரசம் சாதம்.
வழக்கமாக ரசம் தனியாகவும், சாதம் தனியாகவும் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த முறையில் அரிசி, பருப்பு, புளி, தக்காளி, ரசத்திற்குத் தேவையான மசாலா என அனைத்தையும் ஒரே குக்கரில் சேர்த்து சமைத்துவிடலாம்.
குக்கரைத் திறந்தவுடன் வீடு முழுவதும் கமகமக்கும் ரசத்தின் வாசனை பரவும். தக்காளியின் புளிப்புச் சுவை, புளியின் மணம், மிளகின் காரம், பூண்டின் வாசனை என அனைத்தும் அரிசி மற்றும் பருப்புடன் ஒன்றாகக் கலந்து கிடைக்கும். சுடச்சுட ரசம் சாதத்துடன் சிறிது நெய், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வறுவல் சேர்த்துச் சாப்பிட்டால் அதன் சுவையே தனி.
குறிப்பாக வேலைக்குச் செல்பவர்கள், பேச்சுலர்கள், அவசரமாக மதிய உணவு தயாரிக்க நினைப்பவர்கள் என அனைவருக்கும் இந்த ரெசிபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி, இப்போது குக்கரில் சுவையான ஒன் பாட் ரசம் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
அரிசி, பருப்பை ஊறவைக்கவும்
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் துவரம்பருப்பை ஒன்றாகச் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். இவ்வாறு ஊறவைப்பதால் அரிசியும் பருப்பும் நன்றாக வெந்து மென்மையாகக் கிடைக்கும்.
மிளகு, சீரகம் இடித்துக்கொள்ளவும்
மிளகு, சீரகம் மற்றும் பூண்டு பற்களை ஒரு உரலில் சேர்த்து கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவும். இதனை மிக நைசாக அரைக்க வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு இடித்துச் சேர்ப்பதால் ரசம் சாதத்திற்கு நல்ல மணமும் காரமும் கிடைக்கும்.
குக்கரில் பொருட்களைச் சேர்க்கவும்
இப்போது குக்கரை அடுப்பில் வைத்து ஊறவைத்த அரிசி, துவரம்பருப்பைச் சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, இடித்த மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பின்னர் புளிக்கரைசல், மஞ்சள் தூள், ரசப்பொடி, பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு வெல்லம் சேர்க்கவும்.
வேகவைக்கவும்
இப்போது டேவையான தண்ணீர் ஊற்றி அனைத்தையும் நன்றாகக் கலக்கவும். குக்கரை மூடி மிதமான தீயில் சுமார் 4 விசில் வரும் வரை வேகவைக்கவும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறக்கவும். அரிசி, பருப்பு இரண்டும் நன்றாக வெந்து குழைந்திருக்க வேண்டும்.
ரசம் சாதத்தை மசிக்கவும்
குக்கரைத் திறந்ததும் சாதத்தை நன்றாகக் கரண்டியால் மசித்துக்கொள்ளவும். ரசம் சாதம் மிகவும் கெட்டியாக இருந்தால் தேவையான அளவு சூடான தண்ணீர் சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம். சாதம் சற்று தளர்வாகவும் குழைவாகவும் இருப்பது சுவையாக இருக்கும்.
தாளித்துச் சேர்க்கவும்
இறுதியாக ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
இந்தத் தாளிப்பை குக்கரில் உள்ள ரசம் சாதத்தில் கொட்டவும். அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்துக் கிளறிய பிறகு அடுப்பை அணைத்துவிடவும். சுவையான ஒன் பாட் ரசம் சாதம் தயார்.
அரிசி தேர்வு: சோனா மசூரி அரிசி பயன்படுத்தினால் ரசம் சாதம் நன்றாகக் குழைந்து வரும். பச்சரிசியும் பயன்படுத்தலாம்.
மிளகு, சீரகம்: மிளகு, சீரகம், பூண்டை இடித்துச் சேர்ப்பது நல்ல மணத்தைக் கொடுக்கும்.
புளியின் அளவு: தக்காளியிலும் புளிப்புத்தன்மை இருப்பதால் புளியை அளவாகச் சேர்க்கவும்.
வெல்லம்: சிறிதளவு வெல்லம் சேர்ப்பது புளிப்பு, காரத்தின் சுவையைச் சமநிலைப்படுத்தும்.
தண்ணீர்: ரசம் சாதம் ஆறும்போது கெட்டியாகிவிடும். எனவே பரிமாறுவதற்கு முன்பு தேவையான அளவு சூடான தண்ணீர் சேர்த்துக் கலக்கலாம்.
நெய்: இறுதியில் நெய் சேர்ப்பது ரசம் சாதத்தின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.
ஒன் பாட் ரசம் சாதத்தை,
குக்கரில் அரிசி, பருப்பு, புளி உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்துச் சமைப்பதால், தண்ணீரின் அளவை அரிசியின் வகை மற்றும் நீங்கள் விரும்பும் குழைவான பதத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளுங்கள். குக்கரைத் திறப்பதற்கு முன்பு அழுத்தம் முழுமையாக வெளியேறியிருப்பதை உறுதிசெய்யவும்.
இந்த ஒன் பாட் ரசம் சாதத்தை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். நேரமும் மிச்சம், பாத்திரங்களும் குறைவு, சுவையோ அட்டகாசம்.