Sabudana Rava Idli : வழக்கமான இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வீட்டில் இருக்கும் சாபுதானா, ரவை மற்றும் தயிரை வைத்து வித்தியாசமான சுவையில் சாபுதானா–ரவை இட்லி செய்து பாருங்கள். காலை உணவாக மட்டுமின்றி மாலை நேர சிற்றுண்டியாகவும் இதை பரிமாறலாம்.
தினமும் காலை இட்லி, தோசை என ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால், வீட்டில் இருக்கும் சாபுதானா (ஜவ்வரிசி), ரவை மற்றும் தயிரை வைத்து இந்த சுவையான, மென்மையான சாபுதானா–ரவை இட்லியை செய்து பாருங்கள்.
எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில் வேகவைப்பதால், காலை உணவாக மட்டுமின்றி மாலை நேர சிற்றுண்டியாகவும் இதை பரிமாறலாம். வழக்கமான இட்லிக்கு பதிலாக இப்படி ஒரு புதுமையான டிபன் செய்து கொடுத்தால் வீட்டில் அனைவரும் ஹாப்பி ஆயிடுவாங்க.
25
தேவையான பொருட்கள்
சாபுதானா (ஜவ்வரிசி) – 1 கப்
ரவை – 1 கப்
புளித்த தயிர் – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
துருவிய தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1–2
கறிவேப்பிலை – சிறிதளவு
முந்திரி – விருப்பத்திற்கேற்ப
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
நறுக்கிய சோம்பு கீரை வாசனைக்காக
35
சுவையான சாபுதானா–ரவை இட்லி செய்வது எப்படி?
முதலில் ஜவ்வரிசியை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4–5 மணி நேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் அதிகப்படியான தண்ணீரை வடித்துவிடவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு ரவையை மிதமான தீயில் லேசாக வறுக்கவும். நல்ல வாசனை வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். ரவையை லேசாக வறுப்பது இட்லிக்கு நல்ல சுவையையும் தன்மையையும் கொடுக்க உதவும்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் ஊறிய சாபுதானா மற்றும் ரவையை சேர்க்கவும். இதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இவற்றை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். அவை பொரிந்ததும் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு கீரை மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும். பிறகு இந்த தாளிப்பை ஊறிய இட்லி மாவில் சேர்த்து, அதனுடன் 1 டேபிள்ப் ஸ்பூன் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
55
சாபுதானா–ரவை இட்லி ரெடி
அடுத்தது இட்லி பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, இட்லி தட்டுகளில் மாவை ஊற்றவும். தொடர்ந்து தட்டுகளை உள்ளே வைத்து 8–10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். வெந்ததும் ஒரு ஸ்பூன் பயன்படுத்தி இட்லிகளை மெதுவாக எடுக்கவும்.
வெளிப்புறத்தில் மென்மையாகவும், உள்ளே ஜவ்வரிசி முத்துக்கள் லேசாகத் தெரியும் வகையிலும் இருக்கும் இந்த சாபுதானா–ரவை இட்லியை தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறினால் சுவை அசத்தலாக இருக்கும். காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேரத்திலும் இந்த வித்தியாசமான இட்லியை செய்து அசத்தலாம். நீங்களும் டிரை பண்ணி பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.