பச்சை மிளகாய் தொக்கு :
பச்சை மிளகாயில் சாப்பாடா? அதை எப்படி சாப்பிடுவது என நினைக்கிறீர்களா? ஒருமுறை இந்த பச்சை மிளகாய் தொக்கை ருசித்து பார்த்தால் அதற்கு பிறகு இப்படி கேட்கவே மாட்டீர்கள். சாதம், இட்லி, தோசை, ரொட்டி, சப்பாத்தி போன்ற எந்தவகை உணவுடனும் அருமையாக சைட் டிஷ்ஷாக இருக்கும். காரசாரமான உணவை விரும்புவோருக்கு இச்சுவையான தொக்கு அபாரமாக இருக்கும். இது நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்பதும் கூடுதல் சிறப்பு ஆகும்.
மிளகாய் தொக்கு – ஒரு பாரம்பரிய உணவு மருந்து :
மிளகாயின் மருத்துவ பயன்கள் எண்ணற்றவை. உணவில் சேர்த்தால் ஜீரண சக்தியை அதிகரிக்கவும், உடல் சூட்டை சமப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில், மிளகாய் தொக்கு உடலை உஷ்ணப்படுத்தும் தன்மையால் பயன்படும். பேச்சுலர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பச்சை மிளகாய் - 250 கிராம்
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு சிறிய கொத்து
நெல்லை ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை...ஈஸியாக செய்வது எப்படி?
செய்முறை :
- பச்சை மிளகாய்களை நீளமாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் மிளகாயை வதக்கவும்.
மிளகாய் வெடிக்காமல் மிருதுவாகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
- வெந்தயம், கடுகு சேர்த்து பொன் நிறமாக வரும் வரை வறுக்கவும். இந்த கலவையை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- மீண்டும் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, பெருங்காயத்தூள், புளி கரைசல் சேர்க்கவும்.
- உப்பு, வறுத்த மிளகாய், வெந்தயம்-கடுகு பொடி சேர்த்து நன்றாக கிளறவும்.
- அடுப்பை சிம்மில் வைத்து இதை செய்வதால் சுவை அதிகரிக்கும்.
- கலவை நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கினால் தொக்கு தயார்
சேமிக்கும் முறை :
- எப்போதும் கண்ணாடி பாட்டிலில் அல்லது களிமண் மண்பானையில் அல்லது பீங்கான் ஜாடியில் வைத்து பயன்படுத்தவும்.
- மூன்று வாரங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
- அதிக நாள் வைத்திருக்க விரும்பினால், அதிக எண்ணெய் சேர்த்து தொக்கு தயாரிக்கவும்.
உணவுடன் எப்படி சாப்பிடலாம்?
- சூடான சாதத்தில் ஒரு சொட்டு நெய் சேர்த்து, மிளகாய் தொக்கு சேர்த்து சாப்பிட்டால் சொர்க்க சுவையாக இருக்கும்.
- தோசை, இட்லி, அப்பம், பணியாரம் போன்றவற்றுடன் சூப்பர் சைட் டிஷ்
- சப்பாத்தி, பரோட்டா, காய்கறி ரொட்டிகள், முறுக்கு போன்றவை கூட சிறந்த சைட் டிஷ்.