இன்னும் அடுத்த சில வாரங்களில் பள்ளி படிக்கும் குழந்தைகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப் பட உள்ளது. இப்படி வீட்டில் இருக்கப்போகும் உங்கள் வீட்டு குட்டிஸ்களுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளை செய்து கொடுத்தால், விடுமுறையை இனிதே கழிப்பார்கள். வழக்கமாக செய்கின்ற உணவு வகைகளையே கொஞ்சம் புதுமையாக ஏதேனும் செய்து கொடுத்தால் மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள்.
அப்படி டிஃபரென்ட்டான ஒரு ரெசிபியை தான் காண உள்ளோம். அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? கட்லெட் தான் இன்று நாம் பார்க்க உள்ள ரெசிபி! அட கட்லெட்டில் என்ன புதுமை, வித்தியாசம் இருக்கப்போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். வழக்கமாக கட்லெட்டை நீங்கள் உருளைக்கிழங்கு,பட்டாணி,வெங்காயம் ,பன்னீர் போன்றவற்றை வைத்து தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். பூசணிக்காய் வைத்து கட்லெட் செய்திருக்க மாட்டீர்கள் .
பூசணிக்காய் போன்ற நீர் காய்களை குழந்தைகள் மட்டுமல்லது பெரியவர்களும் விரும்பி சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு நாம் பூசணி வைத்து பெரும்பாலும் பொரியல் அல்லது கூட்டு வைத்து கொடுப்பதால் அவர்கள் அதனை சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். அதே பூசணிக்காயை இப்படி கட்லெட் செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய கட்லெட் ரெசிபியை பூசணிக்காய் வைத்து எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பூசணிக்காய் -1/4 கிலோ
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
அரிசி மாவு - 2 ஸ்பூன்
கார்ன் பிளார்-2 ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
கறி மசாலாத்தூள் - 1 ஸ்பூன்
லெமன் ஜூஸ்-1 ஸ்பூன்
பிரெட் க்ரம்ஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பத்து நிமிஷத்தில பக்கத்து வீடு வரை மணக்கும் மஷ்ரூம் மஞ்சூரியன்!
செய்முறை:
முதலில் பூசணிக்காயை துருவி வைத்துக் கொண்டு,பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது துருவிய பூசணிக்காயில் சிறிது நீர் தெளித்து, சுமார் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து(இட்லி வேக வைப்பது போல்) ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, வேக வைத்து எடுத்துள்ள பூசணிக்காய் துருவல், பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் அரிசி மாவு, கார்ன் பிளார், கறி மசாலா தூள், மிளகு தூள், லெமன் ஜூஸ் மற்றும் உப்பு தூவி நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். இந்த மாவினை கட்லெட் செய்வதற்கு தட்டிக் கொள்ள வேண்டும். ஒரு தட்டில் பிரட் க்ரம்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கட்லெட்களை இந்த பிரட் க்ரம்ஸ் மீது பிரட்டி எடுத்து சுமார் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்து இருக்க வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கட்லெட்களை சேர்த்து 2 பக்கமும் பொன்னிறமாக வந்த பின் எடுத்து விட வேண்டும். அவ்ளோதான் சுவையான பூசணிக்காய் கட்லெட் ரெடி!