Egg: தினமும் முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா? உடலுக்கு ஆபத்தா? அல்லது இது வெறும் பயமா? யாரெல்லாம் முட்டையை தினமும் சாப்பிடலாம்? யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
காலை உணவில் முட்டை என்பது பலருக்கும் தவிர்க்க முடியாத உணவாகிவிட்டது. புரதம், வைட்டமின்கள் என பல முக்கியமான சத்துக்கள் முட்டையில் இருப்பதால், தினமும் உணவில் முட்டையை சேர்த்துக்கொள்வது பொதுவாக ஆரோக்கியமான பழக்கமாகவே கருதப்படுகிறது.
26
முட்டையில் உள்ள சத்துக்கள்
ஒரு பெரிய முட்டையில் சுமார் 6 கிராம் புரதம் இருப்பதுடன், கோலின் (Choline),வைட்டமின் A, பயோட்டின் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இவை தசை வளர்ச்சிக்கும் உடல் வலிமைக்கும் உதவுகிறது. குறிப்பாக, முட்டையின் வெள்ளைக்கருவில் அதிகளவில் புரதமும்,மஞ்சள் கருவில் கொலஸ்ட்ராலும் அதிகமாக உள்ளது.
36
தினமும் முட்டை சாப்பிடக்கூடாதா?
அப்படியென்றால், தினமும் முட்டை சாப்பிடக்கூடாதா? என்றால் அப்படி கிடையாது. கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (American Heart Association - AHA) வெளியிட்ட அறிவியல் ஆலோசனையில், ஆரோக்கியமானவர்கள் தினமும் ஒரு முழு முட்டை சாப்பிடலாம் என்று குறிப்பிட்டுள்ளது.
முக்கியமாக முட்டையை எப்படி சாப்பிடுறோம் என்பதும் ரொம்ப முக்கியம். முட்டையில இருக்கிற சத்துக்களை முழுமையாக பெற, வேகவைத்த முட்டை அல்லது குறைந்த எண்ணெயில் சமைத்த முட்டையை சாப்பிடலாம்.
அதே நேரம், அதிக எண்ணெய், வெண்ணெய், உப்பு சேர்த்து சாப்பிடுறதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. குறிப்பாக, முட்டையுடன் அதிக வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பேக்கன், சாசேஜ் போன்ற அதிக நிறைவுற்ற கொழுப்பு கொண்ட உணவுகளை அடிக்கடி சேர்த்துக்கொள்வது தவிர்க்கவும்.
56
யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?
கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள் – குறிப்பாக LDL (கெட்ட கொலஸ்ட்ரால்) அதிகமாக இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதய நோய் உள்ளவர்கள் அல்லது இதய நோய் அபாயம் அதிகம் உள்ளவர்கள்
நீரிழிவு நோய் உள்ளவர்கள்.
முட்டைக்கு அலர்ஜி இருப்பவர்கள்.
இவர்கள் தினமும் எத்தனை முட்டை சாப்பிடலாம் என்பதை தனிப்பட்ட உடல்நிலை மற்றும் உணவுமுறையைப் பொறுத்து மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரிடம் ஆலோசிப்பது நல்லது. குறிப்பாக நீரிழிவு அல்லது அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அரிவுறுத்துகின்றனர்.
66
முடிவு
முட்டை நல்லதா, கெட்டதா? என்பதை மட்டும் பார்க்காமல், எவ்வளவு சாப்பிடுகிறோம், எப்படி சமைக்கிறோம், அதனுடன் என்ன சாப்பிடுகிறோம் என்பதையும் கவனிப்பதே முக்கியமாகும்.