காதலன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பிரபுதேவா இல்லயாம்.. தயங்கிய ஷங்கர்.. சமாதானம் செய்த தயாரிப்பாளர்..

First Published Jan 31, 2024, 3:56 PM IST

காதலன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது பிரபுதேவா இல்லை என்று உங்களுக்கு தெரியுமா?

ஜெண்டில் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கிய படம் தான் காதலன். பிரபு தேவா, நக்மா, எஸ்.பி.பி, கிரிஷ் கர்னாடு, ரகுவரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சாதாரண இளைஞன் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதல் தான் படத்தின் மையக்கதை. 1994-ம் ஆண்டு வெளியான இப்படம் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

கே.டி. குஞ்சுமோன் தயாரித்த இந்த படத்திற்கு ஜீவா ஒளிப்பதிவு செய்திருப்பார். ஏ.ஆர். ரஹ்மானின் துள்ளலான இசையில் அனைத்து பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் ஆனது. மேலும் இன்றளவும் எவர்கிரீன் ஹிட் ஆல்பங்களில் ஒன்றாக காதலன் படம் உள்ளது.

இந்த படத்திற்கு பல்வேறு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்தது. 4 தேசிய விருதுகள், 2 பிலிம்ஃபேர் சவுத் விருதுகளை காதலன் படம் வென்றது. இந்த படத்தின் மூலம் பாடகராக அறிமுகமான உன்னி கிருஷ்ணனுக்கு முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது. ஆம். என்னவளே, அடி என்னவளே பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை உன்னி கிருஷ்ணன் வென்றார்.

சிறந்த ஆடியோகிராபிக்காக ஏ.எஸ் லக்ஷ்மி நாராயணன் மற்றும் வி.எஸ் மூர்த்தி ஆகியோரும், சிறந்த எடிட்டிங்க்கான விருது லெனின், வி.டி விஜயனுக்கும்,, சிறந்த விசுவல் எஃபெக்ட்ஸுக்கான விருது வெங்கிக்கும் கிடைத்தது. இதே போல் சிறந்த தமிழ் இயக்குனருக்கான சவுத் பிலிம்ஃபேர் விருது ஷங்கருக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கும் வழங்கப்பட்டது.

ஆனால் காதலன் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது பிரபுதேவா இல்லை என்று உங்களுக்கு தெரியுமா? ஆம். இந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஷங்கர் விரும்பி உள்ளார். ஆனால் அந்த நேரத்தில் பிராசந்த் படுபிஸியாக இருந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. எனவே பிரபுதேவாவை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் கூறியுள்ளார். ஆனால் ஒல்லியான உடம்பு, தாடி வைத்த தோற்றம் ஆகியவற்றை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று விநியோகஸ்தர்கள் கருதியதால் முதலில் பிரபுதேவாவை நடிக்க வைக்க ஷங்கர் தயங்கி உள்ளார்.

எனினும் குஞ்சுமோன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் சங்கரை சமாதானம் செய்துள்ளார். இதற்கு பிறகே பிரபுதேவா இந்த படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு விக்ரம் தான் டப்பிங் கொடுத்திருப்பார். அதே போல் இந்த படத்தில் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டவர் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீக்‌ஷித்.. ஆனால் அவரும் பிசியாக இருந்ததால் அதன்பின்னரே நக்மா தேர்வு செய்யப்பட்டார்.

அதே போல் கவுண்டமணி இந்த படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று குஞ்சுமோன் விரும்பி உள்ளார். ஆனால் அவரும் பிசியாக இருந்ததால் வடிவேலுக்கு அந்த வாய்ப்பு வந்துள்ளது. எது எப்படியோ தனது மேக்கிங் மூலம் சாதாரண கதை களம் கொண்ட காதலன் படத்தையும் மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றினார் ஷங்கர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

click me!