ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்று விரைவில் முடிவடைய இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அந்த தொடரில் நடிக்கும் நடிகர்களே உறுதிப்படுத்தி உள்ளனர்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ என்னும் சீரியல் மூலமாக அறிமுகமானவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா. இருவரும் இந்த நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு சித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி பாகம் 2’ல் ஹீரோவாக நடித்தார். ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘ரஜினி’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இரண்டு நாடகமும் முடிந்த பிறகு இருவரும் பெரிய அளவில் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தனர்.
25
வள்ளியின் வேலன் தொடர்
இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘வள்ளியின் வேலன்’ தொடரில் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்ரேயா வள்ளி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாகவும், சித்து வேலன் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். திருமணத்திற்குப் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் தொடர் என்பதால், இவர்களின் நடிப்பும் கச்சிதமாக பொருந்தி இருந்தது. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரிக்காகவே ‘வள்ளியின் வேலன்’ சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
35
200 எபிசோடுகள் மட்டுமே நிறைவு
பணக்கார வீட்டில் பிறந்த கதாநாயகி அப்பாவின் பாசம் கிடைக்காமல் தவித்து வருகிறார். தந்தையின் அன்புக்காக அவர் ஏங்குகிறார். அவரிடம் உதவியாளராக பணிபுரியும் வேலன் கதாநாயகிக்கு எப்படி உதவுகிறார் என்பதே இந்த சீரியலின் மையக்கரு. இந்தத் தொடர் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில் 200 எபிசோடுகளை மட்டுமே நிறைவு செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக சித்து மற்றும் ஸ்ரேயா தம்பதிகள் கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இதனால் ‘வள்ளியின் வேலன்’ சீரியல் முடிவடைய இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த சீரியல் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த சீரியலின் இயக்குனராக இருந்த பிரதாப் கதாநாயகன், கதாநாயகி மற்றும் நடிகைகளை மரியாதை இன்றி ஒருமையில் அழைப்பது, மோசமாக பேசுவது போன்ற காரணங்களால் தொடரில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.
55
கவலையில் ஆழ்ந்த ரசிகர்கள்
பிறகு மற்றொரு இயக்குனரை வைத்து சில மாதங்களாக கதையை நகர்த்திய நிலையில், தற்போது சீரியலை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்து ஸ்ரேயா இருவரும் இணைந்து ஒரு தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி ரசிகர்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர். 200 எபிசோடுகள் மட்டுமே நிறைவடைந்து இருக்கும் நிலையில், சீரியல் முடிவுக்கு வர இருப்பதால் சித்து - ஸ்ரேயா ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.