கே.ஜி.எஃப். 2 ரிலீசுக்கு ரெடி
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படம் கே.ஜி.எஃப். பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார். முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தையும் பிரசாந்த் நீல் தான் இயக்கி உள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது.
ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது
இதில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார். கடந்தாண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் முடங்கிக் கிடந்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் குறைந்துள்ளதால் படத்தின் ரிலீஸ் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.
5 மொழிகளில் டிரைலர்
படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி உள்ளதால், இதன் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூருவில் இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளிலும் டிரைலர் வெளியிடப்பட்டது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மாஸான பஞ்ச் டயலாக்குகள் மற்றும் பிரம்மாண்ட விஷுவல்ஸ் என படு மாஸாக இருந்த இந்த டிரைலருக்கு அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஆர்.ஆர்.ஆர் சாதனை முறியடிப்பு
இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 டிரைலர் புது சாதனை ஒன்றை படைத்துள்ளது. இந்த டிரைலர் வெளியான 24 மணிநேரத்தில் 5 மொழிகளிலும் சேர்த்து 109 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக இந்தியில் 51 மில்லியனும், தெலுங்கில் 20 மில்லியன், கன்னடத்தில் 18 மில்லியன், தமிழில் 12 மில்லியன், மலையாளத்தில் 8 மில்லியன் என மொத்தம் 109 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.