
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படமானது, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளை முன்னிட்டு வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வியாழக்கிழமை திரைக்கு வருகிறது. தர்பார் மற்றும் ஜெயிலர் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் போலீஸ் கதையை மையப்படுத்திய வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த தர்பார், ஜெயிலர் படங்களாக இருக்கட்டும், இப்போது நடித்திருக்கும் வேட்டையன் படமாக இருக்கட்டும் 3 படங்களுமே கதை, காட்சிகள், வசனங்களின் அடிப்படையில் ஒவ்வொரு படத்தையும் பிரதிபலிக்கிறது.
3 படங்களும் போலீஸ் ஸ்டோரி என்பதையும் தாண்டி, 3 படங்களுக்குமே அனிருத் தான் மியூசிக். அவரது மியூசிக்கிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கச்சிதமாக கொடுத்து பட்டிதொட்டியெங்கும் ஹிட் கொடுத்துவிட்டார். ஆனால், படத்தின் கதைக்கு தான் தற்போது பங்கம் வந்திருக்கிறது. ஏனென்றால், ரஜினிகாந்தை இதற்கு முன்னதாக போலீசாக தர்பார் மற்றும் ஜெயிலர் படங்களில் பார்த்துவிட்டோம். இதுக்கு மேல வேறென்ன ஆக்ஷன் காட்சி இருக்க போகிறது என்று நினைக்க வைக்கும் அளவிற்கு 2 படங்களிலுமே ஆக்ஷன் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
இந்த 2 படங்களையும் தாண்டி வேறென்ன வேட்டையன் படத்தில் இருக்க போகிறது என்று நினைக்கும் அளவிற்கு தற்போது வேட்டையன் டிரைலர் வெளியாகியிருந்தது. ஆனால், இந்த டிரைலரை பார்க்கும் போது தர்பார் மற்றும் ஜெயிலர் 2 படங்களையும் பார்த்தாச்சு, புதுசா டிரைலரில் ஒன்றும் இல்லை என்று நினைக்க தோன்றிவிட்டது.
ஏன் ரஜினிகாந்த் இயக்குநர் டி ஜே ஞானவேலுவிடம் கதை கேட்கும் போது போலீஸ் கதை தானா? அது ஏற்கனவே தர்பார் மற்றும் ஜெயிலர் படங்களில் செய்தாச்சு என்று சொல்லலயா? அல்லது ரஜினிகாத் இந்த கதையை கேட்கவில்லையா என்றெல்லாம் கேள்வி எழுகிறது. ஏன் என்று கேட்டால் இயக்குநர் டி ஜே ஞானவே வேட்டயன் படத்தோடு மொத்தமாக 3 படங்களை இயக்கியிருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கூட்டத்தில் ஒருவன், 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஜெய் பீம். இதில், சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஜெய் பீம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு தற்போது வேட்டையன் படத்தை இயக்கியிருக்கிறார்.
டி ஜே ஞானவேல் ஒரு இயக்குநரையும் தாண்டி அவர் ஒரு டயலாக் ரைட்டர். ரத்த சரித்திரம், பயணம், தோனி, உன் சமையல் அறையில் ஆகிய படங்களுகு டயலாக் எழுதியிருக்கிறார். அப்படியிருக்கும் போது இவருக்கு போய் ஏன் கால்ஷீட் கொடுத்தார் என்று தான் தெரியவில்லை. எது எப்படியோ படம் ரஜினிகாந்திற்காக திரையில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியான 2.39 நிமிடம் கொண்ட வேட்டையன் டிரைலர் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே கொண்டுள்ளது. பெண்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களையும், ஆக்ஷன் காட்சிகளையுமே வேட்டையன் பிரதிபலிக்கிறது.
படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப படத்தில் ரஜினியின் ஆக்ஷன் தான் இருக்கும் என்று தெரிகிறது. இதனை ஏற்கனவே தர்பார், ஜெயிலர் படங்களில் பார்த்தாச்சு. இன்றைய சினிமா உலகத்தில் ஒரு படம் திரைக்கு வருகிறது என்றால் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டுமே நேர்மறையான விமர்சனம் வரும். அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எதிர்மறையான விமர்சனம் தான் வரும். அது எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் சரி, கதை பிடித்தால் மட்டுமே நல்ல விமர்சனம்.
பல இடங்களில் ரஜினிகாந்தே மறைமுகமாக கூறியிருக்கிறார். அதாவது, படம் முடிந்துவிட்டது. இனி ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்கள் தான் ஆதரவு கொடுக்க வேண்டும். தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதையெல்லாம் அவர் சொல்லவே தேவையில்லை. ஏனென்றால், கடந்த வாரம் திரைக்கு வந்த சிறிய பட்ஜெட் படமான லப்பர் பந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் பெரிதாக சண்டைக் காட்சிகளும் இல்லை. இரட்டை வசன காட்சிகளும் இல்லை. எதார்த்தமான நடிப்பு, கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள், இசை, எளிமையான நடிகர்கள் என்று அனைவரையும் வைத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், விஜய் நடித்த கோட் படத்தில் AI தொழில்நுட்பம் மூலமாக மறைந்த நடிகர் விஜயகாந்த் காட்டப்பட்டிருப்பார். ஆனால், அப்போது அந்த படத்தில் கிடைக்காத வரவேற்பு எல்லாம் லப்பர் பந்தில் விஜயகாந்தின் போஸ்டர், புகைப்படம் மற்றும் பொட்டு வச்ச தங்க குடம் ஊருக்கு நீ மகுடம் என்ற பாடலுக்கு கிடைத்த வரவேற்பு ஷார்ட்ஸ் மற்றும் ரீல்ஸில் இன்றும் டிரெண்டிங்கில் உள்ளது. இதுக்கு காரணம் லப்பர் பந்தின் கதை, அந்த கதைக்கான கதாபாத்திரம் இந்த இரண்டும் தான்.
ஆதலால், ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையனுக்கு ரசிகர்கள் எந்தளவிற்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை இன்னும் 8 நாட்களுக்கு பிறகு நாம் பார்த்து தெரிந்து கொள்வோம்.