இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான கே.எல்.ராகுலுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது. அவர் அதியா ஷெட்டி என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள உள்ளது. இவர்களது திருமணம் இன்று மாலை மகாராஷ்டிரா மாநிலம் கண்டிலாவில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்க உள்ளார்கள். அதியா ஷெட்டி பற்றியும் அவருக்கும் பாலிவுட் நடிகருக்கும் உள்ள தொடர்பு பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
யார் இந்த அதியா ஷெட்டி?
கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டிக்கும் பாலிவுட்டுக்கும் இருக்கும் தொடர்பு என்னவென்றால், அவரது தந்தை சுனில் ஷெட்டி, பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆவார். இவர் வில்லனாக பல்வேறு படங்களில் மிரட்டி இருக்கிறார். இவர் தமிழிலும் ஷியாம் உடன் 12பி, ரஜினியின் தர்பார் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் சுனில் ஷெட்டி.
அதியா ஷெட்டியின் பாலிவுட் பயணம்
தந்தையைப் போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஹீரோ என்கிற இந்தி படம் மூலம் பாலிவுட்டில் நடிகையாக காலடி எடுத்து வைத்தார் அதியா ஷெட்டி. இவருக்கு முதல் படத்திலேயே ஏராளமான விருதுகளும் கிடைத்தன. குறிப்பாக சிறந்த புதுமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் அதியா ஷெட்டி வென்றார். இதையடுத்து 2 படங்களில் மட்டும் நடித்த அதியா ஷெட்டி, கடந்த 2019-ம் ஆண்டுக்கு பின்னர் படங்களில் நடிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... பிரமாண்டமாக நடக்கும் கேஎல் ராகுல் அதியா ஷெட்டி திருமணம்! நேரம் எப்போது தெரியுமா?
காதல் மலர்ந்தது எப்படி?
கே.எல்.ராகுலும், அதியா ஷெட்டியும் நண்பர் ஒருவர் மூலம் தான் அறிமுகமாகி உள்ளனர். இதையடுத்து இருவரும் ஒன்றாக விளம்பரங்களில் நடித்தபோது இருவருக்கும் இடையேயான நட்பு அடுத்தகட்டத்துக்கு சென்று காதலாக மாறியது. பின்னர் இருவரும் வெளிநாடுகளுக்கு ஒன்றாக பயணிக்க ஆரம்பித்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு கே.எல்.ராகுலுக்கு காலில் காயம் ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றபோது அவரை முழுக்க முழுக்க உடனிருந்து கவனித்துக் கொண்டது அதியா ஷெட்டி. அந்த சமயத்தில் தான் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து இருவரும் வீட்டில் பேசி சம்மதம் வாங்கிய பின்னர் தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இன்று மாலை 4 மணிக்கு இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்... கேஎல் ராகுலின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியத்தை சொல்லும் டாட்டூஸ்!