
What is BUDS ACT in Vettaiyan Movie: விஜய் நடிப்பில் திரைக்கு வந்து வெற்றிநடை போட்ட சர்கார் படம் தேர்தல் விதிமுறை குறித்து முக்கியமான விழிப்புணர்வு ஒன்றை மக்களிடையே ஏற்படுத்தியது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேர்தலில் உங்களது வாக்கானது கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டிருந்தால் அதற்கு பதிலாக நீங்கள் உங்களது வாக்கை பதிவு செய்ய விரும்பினால் 49 பி பிரிவின் கீழ் நீங்கள் உங்களது வாக்கை செலுத்த முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
சர்கார் படத்திற்கு பிறகு தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் வேட்டையன் படத்தில் சட்டம் தொடர்பான ஒரு விதிமுறை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது என்ன என்று கேட்டால் அது தான் பட்ஸ் ஆக்ட் (BUDS ACT) BUDS (Banning of Unregulated Deposit Schemes) என்றால் வரையறுக்கப்படாத வைப்புத் திட்டங்களை தடை செய்யும் சட்டம்.
இந்த சட்டம் குறித்து தான் வேட்டையன் படத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதைப் பற்றி சொல்வது நடிகர் அமிதாப் பச்சன். படத்தில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், இந்த பட்ஸ் ஆக்ட் பொருளாதார குற்றங்களை விசாரிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டம். இந்த பட்ஸ் விதி சிறப்பு சட்டத்தில் ஒரு சீட்டிங் கேஸ் அதாவது மோசடி வழக்கில் ஒருவருக்கு 100 ஆண்டுகள் வரையில் தண்டனை கிடைக்கும் என்று வேட்டையன் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூட இந்த சட்ட விதிக்கு உட்பட்ட ஒரு சம்பவம் நடைபெற்றது. MLM நிறுவனங்களின் பெயரில் மோசடி சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. இதற்காகவே கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதலீடு செய்தவர்கள், நாங்கள் இதில் முதலீடு செய்திருக்கிறோம் என்று கூறி புதிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். அப்படி வரும் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு பாதி பணத்தை லாபம் என்ற பெயரில் பழைய முதலீட்டாளர்கள் எடுத்துக் கொள்வார்கள்.
இதே சுழற்சி முறை தான் திரும்ப திரும்ப நடைபெறும். எப்போது இதில் புதிய முதலீட்டார்கள் இல்லை என்றும் பணம் கொடுக்கப்படுவது நிறுத்தப்படுகிறது என்றும் தெரிய வருகிறதோ அப்போது தான் இது ஒரு ஏமாற்று வேலை என்று தெரியவரும்.
இது போன்று ஏமாற்று வேலைகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்டது தான் பட்ஸ் சட்டம். இந்த சட்டத்தின் படி தண்டிக்கப்படும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் 100 ஆண்டுகள் வரையில் தண்டனை விதிக்கப்படும் என்று கூறுகிறார்.
ஆம், உண்மை தான் படத்தில் நடிகர் ராணா டகுபதி ரூ.3 கோடிக்கு மேல் சீட்டிங் செய்வதாக புகார் வந்தால் தான் பொருளாதார குற்றங்களுக்கு கீழ் விசாரணை செய்ய முடியும் என்று ரஜினிகாந்த் கூறுவார். ஆதலால், தான் 100 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை கிடைக்கும் என்று அமிதாப் பச்சன் கூறுகிறார்.
மேலும், இந்த சட்டத்தின் படி கைது செய்யப்படும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியில் வர முடியாது. அங்கீகாரம் இல்லாமல் டெபாசிட் செய்ய வலியுறுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
அங்கீகாரம் இல்லாமல் முதலீடு அல்லது வைப்புகளை ஏற்றுக்கொள்வது என்றால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இதுவே ஏமாற்றிய பணத்தை திருப்பி தராவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், வசூலிக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.
திரும்ப திரும்ப இதே குற்ற செயலலில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.50 கோடி வரையில் அபராதம் விதிக்கப்படும். இந்த குற்றங்கள் மாநிலங்களுக்கு இடையில் பாதிப்புகள் இருந்தால் அதனை விசாரிக்க டிஜிபி, சிபிஐயின் உதவியை நாடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.