மக்கள் விரும்பி படித்த நாவல்களில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வனும் ஒன்று. கல்கியின் இந்த வரலாற்று புனைவு நாவலை சினிமாவாக எடுக்க பல்வேறு ஜாம்பவான்கள் முயன்றார்கள். ஆனால் இறுதியில் மணிரத்னத்தால் மட்டுமே அது சாத்தியமானது. அவரும் அவ்வளவு எளிதாக இந்த படத்தை எடுத்துவிடவில்லை. இரண்டு முறை முயன்று கைகூடாமல் போனாலும், இந்த கதையின் மீதுள்ள காதலால் மூன்றாவது முறை முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார் மணிரத்னம்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 5 பாகங்களைக் கொண்டிருக்கும். ஆனால் அதனை மணிரத்னம் இரண்டு பாகங்களில் படமாக எடுத்துள்ளார். கல்கியின் இந்த படைப்பை எப்படி மணிரத்னம் இரண்டு பாகங்களில் படமாக்கினார் என்பதே ஆச்சர்யம் தான். அப்படி அவர் இரண்டு பாகங்களில் வெற்றிகரமாக ரசிகர்களைக் கவரும் விதமாக படமாக்க, பல்வேறு மாற்றங்களையும் செய்திருக்கிறார். அவை என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
மணிமேகலையை காணோம்
பொன்னியின் செல்வனின் சிறப்பம்சம் என்னவென்றால் அதில் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் இருக்கும். ஆனால் அவை ஒவ்வொன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் கல்கி. அப்படி அந்த நாவலில் இடம்பெற்று இருந்த ஒரு முக்கிய கதாபாத்திரம் தான் மணிமேகலை. சம்புவரையரின் மகளான மணிமேகலை, கதைப்படி வந்தியத்தேவனை காதலிப்பால், இந்த ஒருதலைக் காதல் கைகூடாமல் போக, புத்தி பேதலித்து இறந்துவிடுவாள்.
இந்த முக்கியமான கேரக்டரை முதல் பாகத்தில் காட்டாமல் இருந்த மணிரத்னம், இரண்டாம் பாகத்திலாவது காட்டுவாரா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அதிலும் காட்டாமல் அந்த கேரக்டரையே மொத்தமாக கத்திரி போட்டு தூக்கி இருக்கிறார்கள்.
ஆதித்த கரிகாலன் - அருண்மொழிவர்மன் சந்திப்பு
கல்கி எழுதிய நாவலின்படி அருண்மொழி வர்மனும், ஆதித்த கரிகாலனும் சகோதரர்களாக இருந்தாலும், அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் மணிரத்னம் கொடுத்த டுவிஸ்ட்டில் நாகப்பட்டினம் சூடாமணி புத்த விஹாரத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ளும் படியான காட்சியை புகுத்தி உள்ளார். நாவலை படித்தவர்களுக்கும் பிடிக்கும் வகையில் அண்ணன் தம்பி உறவை அந்தக் காட்சியில் மிக அழகாக காட்டியிருப்பார் மணிரத்னம்.
இதையும் படியுங்கள்... 'பொன்னியின் செல்வன் 2' கடைசி நாள் ஷூட்டிங்கில்... வீடியோ போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமி - சோபிதா துளிபாலா!
ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார்?
பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி வைத்த மிகப்பெரிய டுவிஸ்ட்டே ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்பதை ஒரு புதிராக வைத்திருப்பார். அவர் கடம்பூர் மாளிகையில், இறக்கும் போது நந்தினி அருகில் இருப்பார், அதேபோல் அந்த இடத்தில் ஆபத்துதவிகளும் இருப்பார்கள், இதுதவிர வந்தியத்தேவனும், பெரிய பழுவேட்டரையரும் இருப்பார்கள். இவர்கள் நால்வர் மீதும் சந்தேகத்தை எழுப்பும் வகையிலே நாவலில் டுவிஸ்ட் கொடுத்திருப்பார் கல்கி. ஆனால் படத்தில் ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதை ஓப்பனாகவே சொல்லிவிடுகிறார் மணிரத்னம்.
நந்தினியின் அப்பா யார்?
ஆதித்த கரிகாலனின் கொலையை போல், நந்தினியின் தந்தை யார் என்பதும் நாவலில் தெளிவாக சொல்லப்பட்டு இருக்காது. வீர பாண்டியன், சுந்தரச் சோழன், கருத்திருமன் ஆகிய கதாபாத்திரங்கள் நந்தினியின் தந்தையாக இருக்கலாம் என யூகிக்கும் வகையில் கதையின் போக்கை கொண்டு சென்றிருப்பார் கல்கி. ஆனால் படத்தில் நந்தினியின் தந்தை வீரபாண்டியன் என்று உறுதியா சொல்லிவிடுகிறார்கள்.
பெரிய பழுவேட்டரையர் மரணம்
நந்தினியின் மீதான மோகத்தால் அவரின் பின்புலம் தெரியாமல் அவரை திருமணம் செய்துகொள்ளும் பெரிய பழுவேட்டரையர், கடைசியில் கடம்பூர் மாளிகையில் நடக்கும் சம்பவத்தின் போது தான் தன் மனைவியின் சுயரூபத்தை அறிவார். பின்னர் தன்னுடைய பேரன் ஆதித்த கரிகாலனின் இறப்புக்கு தானும் ஒரு காரணம் எனக் கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு இறப்பார். நாவலில் அப்படி இருந்தாலும், படத்தில் பெரிய பழுவேட்டரையர் இறுதிவரை உயிருடனே இருப்பார்.
உண்மையான மதுராந்தகன் எங்கே?
கல்கி எழுதிய நாவலின்படி மதுராந்தகன் கேரக்டர் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கும். உண்மையில் வீர பாண்டியனின் மகனான மதுராந்தகன், சிறு வயதில் செய்யப்பட்ட ஆள்மாறாட்டம் காரணமாக சோழ அரண்மனையில் மதுராந்தகனாக மாறி இருப்பார். பின்னர் சேந்தன் அமுதன் தான் உண்மையான மதுராந்தகன் என்பது தெரிந்ததும், அவருக்கு மணிமகுடம் சூட்டி அரசனாக்குவார்கள். ஆனால் படத்தில் இதையெல்லாம் தவிர்த்து இருக்கும் மணிரத்னம், ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட கதையெல்லாம் சொல்லாமல் அந்த கேரக்டரை சிம்பிளாக கடந்து சென்றிருக்கிறார்.
சேந்தன் அமுதன் - பூங்குழலி கல்யாணம்
நாவலின்படி சமுத்திரக்குமாரி பூங்குழலி, முதலில் அருண்மொழி வர்மன் மீது காதல் வயப்படுவார். அவரை திருமணம் செய்துகொண்டால் அரச வாழ்க்கை கிடைக்கும் என ஆசைப்படும் அவர், பின்னர் மனம்மாறி சேந்தன் அமுதனை கரம்பிடித்துக் கொள்வார். பின் சேந்தன் அமுதன் தான் உண்மையான மதுராந்தகன் என தெரிந்ததும் அவர் விரும்பிய அரச வாழ்க்கையும் கிடைக்கும். ஆனால் படத்தில் சேந்தன் அமுதனை பூங்குழலி நிராகரிக்கும் படி காட்டி உள்ளனர்.
இப்படி எக்கச்சக்கமான மாற்றங்களை செய்து தான் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களில் முடித்திருக்கிறார் மணிரத்னம்.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா.! அடேங்கப்பா.!!