தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் நடித்த எனிமி திரைப்படம் கடந்தாண்டுதீபாவளிக்கு வெளியானது. ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.
அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை வருகிற ஜனவரி 26-ந் தேதி திரையிட திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின் அடுத்த மாதம் இப்படம் திரை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வீரமே வாகை சூடு திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ.10.5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். மேலும் டிஜிட்டல் உரிமை ரூ.17 கோடிக்கும், டப்பிங் உரிமை ரூ.9 கோடிக்கும் விற்பனையாகி உள்ளதாம். இதிலேயே 36.5 கோடி வசூலித்து விட்ட இப்படத்திற்கு வெளிநாட்டு உரிமைகளை விற்பதன் மூலமும் சில கோடிகள் கிடைக்குமாம். இதனால் ரிலீசுக்கு முன்பே விஷால் வாகை சூடிவிட்டாதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.