இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என எந்த சமூக வலைதளம் பக்கம் சென்றாலும் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது சத்யன் பாடிய ரோஜா ரோஜா பாடல் தான். அதைப்பற்றி பார்க்கலாம்.
சோசியல் மீடியா ஒருவனை எப்போது வேண்டுமானாலும் பிரபலம் ஆக்கும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகி இருக்கிறார் சத்யன் மகாலிங்கம். பாடகரான இவர், சுமார் 26 ஆண்டுகளுக்கு முன், அதாவது 1999-ம் ஆண்டு ஒரு கச்சேரியில் பாடிய பாடல் இன்று பட்டி தொட்டியெங்கும் ரிப்பீட் மோடில் கேட்கப்பட்டு வருகிறது. சாதக பறவைகள் என்கிற ஆர்கெஸ்ட்ரா குழுவினருடன் சத்யன் பாடிய ரோஜா ரோஜா பாடல் தற்போது வைரலாகி இருக்கிறது. இளம் வயதில், எந்த வித அலட்டல் இல்லாமல், செம ஸ்டைலாகவும், அசால்டாகவும் அந்தப் பாடலை சத்யன் பாடிய விதம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
24
சத்யனை டிரெண்டாக்கிய பாடல்
ரோஜா ரோஜா பாடலை சத்யன் பாடியதை பார்த்த பலரும், அது அவர் பாடிய பாடல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் காதலர் தினம் படத்தில் அப்பாடலை பாடியது உன்னி கிருஷ்ணன். சொல்லப்போனால் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட வேண்டும் என்பது சத்யனின் நீண்ட நாள் ஆசையாம். ஆனால் அவரின் அந்த ஆசை இதுவரை நிறைவேறாமலேயே உள்ளது. தமிழ் சினிமாவில் யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி இருக்கும் சத்யனுக்கு இதுவரை ஒருமுறை கூட ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
34
இதெல்லாம் சத்யன் பாடிய பாடல்களா?
சத்யன் முதன்முதலில் பாடகராக அறிமுகமான படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். அதில் பரத்வாஜ் இசையில் ‘கலக்கப்போவது யாரு’ என்கிற பாடலை பாடி இருந்தார் சத்யன். இதையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையில் சரோஜா படத்தில் தோஸ்து படா தோஸ்து, பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில் அட பாஸு பாஸு பாடல், கழுகு படத்தில் இடம்பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் பாடலான, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் பாடல், நேர்கொண்ட பார்வை படத்தில் தீ முகம் தான் தீம் பாடல், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மாற்றான் படத்தில் இடம்பெற்ற தீயே தீயே பாடல், துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற குட்டி புலி கூட்டம் பாடல் ஆகியவை சத்யன் பாடிய பாடல்கள் தான்.
சத்யனின் ரோஜா ரோஜா பாடல் டிரெண்டான பின் அவருக்கு சினிமாவில் பாட சான்ஸ் கொடுக்க வேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை 7000க்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகளில் பாடி இருக்கிறார் சத்யன். பல திறமை வாய்ந்த பாடகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இசையமைப்பாளர்களே ஒவ்வொரு படத்திலும் இரண்டு, மூன்று பாடல்களை பாடிவிடுகிறார்கள். அப்படி இருக்கையில் சத்யனுக்கு மீண்டும் சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக் குறி தான். அநேகமாக இசையமைப்பாளர்களின் இசைக் கச்சேரிகளில் சத்யனுக்கு பாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.