கேப்டன் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் ஓடவே ஓடாது என நினைத்து நடித்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி இருக்கிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.
சினிமாவில் என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒரு படத்தை கதை கேட்டு தேர்வு செய்யும் ஹீரோக்களினாலேயே அதன் வெற்றியை யூகிக்க முடியாது. சிலர் இந்த படம் கன்பார்ம் ஹிட் ஆகும் என கணித்து இங்கு பிளாப் ஆன படங்கள் ஏராளம். அதேபோல் ஒரு சில நடிகர்கள் நடிக்கும் போதே இந்த படம் தேறுமா தேறாதா என யூகிப்பார்கள். அப்படி கேப்டன் விஜயகாந்த், ஒரு படத்தில் நடிக்கும் போதே இது ஓடாது என கூறி நடித்த படம் ஒன்று பின்னாளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. அந்த மாஸ்டர் பீஸ் திரைப்படம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
விஜயகாந்த் தப்பு கணக்கு போட்ட படம் என்ன?
அந்த படம் வேறெதுவுமில்லை... ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் அவர் நடித்த சின்ன கவுண்டர் தான். விஜயகாந்த் என்றாலே அதிரடி, ஆக்ஷன் தான் என்று இருந்த காலகட்டத்தில், அவருக்கு வந்த படம் தான் சின்ன கவுண்டர். இப்படத்தின் கதை கேட்டபோதே விஜயகாந்துக்கு அதில் நடிக்க விருப்பமில்லையாம். ஆனால் அவரின் நண்பர் ராவுத்தர் சொன்னதால் தான் அதில் நடிக்கவே ஒப்புக்கொண்டாராம் கேப்டன். வழக்கமாக விஜயகாந்த் தன் படங்களில் பக்கம் பக்கமாக வசனம் பேசுவார். ஆனால் சின்ன கவுண்டர் படத்தில் அவருக்கு அதிகளவில் வசனம் இடம்பெற்று இருக்காது.
34
படம் ஓடாதுனு சொன்ன விஜயகாந்த்
சின்ன கவுண்டர் படத்தில் அவரை சுற்றி நடித்த பலரும் ஏராளமான வசனம் பேசி நடிக்க, அவரோ அமைதியாக நிற்கும்படியான காட்சிகள் முதலில் எடுக்கப்பட்டு இருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த விஜயகாந்த், ஆர்.வி.உதயகுமாரின் உதவி இயக்குனர்களிடம், என்னயா எல்லாரும் வசனம் பேசுறாங்க. எனக்கு மட்டும் உதயகுமார் வசனம் எழுத மாட்டானா என கேட்டதோடு, என்னை சும்மாவே நிக்க வச்சிட்டு இருந்தா இந்த படம் ஓடாது எனவும் கூறி இருக்கிறார். இதை இயக்குனர் ஆர்.வி உதயகுமாரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
பின்னர் இந்த தகவல் உதயகுமார் காதுக்கு சென்றதும், அவர் கேப்டனை அமரவைத்து, இந்த கேரக்டர் அதிகம் பேசமாட்டான். ஆனால் அவனைப் பற்றி ஊரே பேசும். அப்படி இருக்கும் ஒரு கம்பீரமான கதாபாத்திரம் ஏன் அதிகம் பேச வேண்டும் என சொல்லி இருக்கிறார். இதைப் புரிந்துகொண்டு விஜயகாந்தும் அப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆனால் படத்தின் ரிசல்ட் அவருக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக அமைந்தது. விஜயகாந்தின் கெரியரில் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய படங்களில் சின்ன கவுண்டரும் ஒன்று. அப்படத்திற்கு கூடுதல் பலம், சேர்த்தது இசைஞானி இளையராஜாவின் இசை. அப்படத்தின் பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது.