மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே. உணவில்லாமல் கஷ்டப்படும் ஏழைகளுக்கு அவரது அலுவலகத்தில் சைவ உணவும், ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ உணவும் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் விஜயகாந்த் தனது வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களை சாப்பிட வைக்காமல் அனுப்ப மாட்டார் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.
25
கேப்டன் நினைவாக புகழ் தொடங்கிய செயல்
விஜயகாந்த் மறைவிற்குப் பின்னர் அவரின் இந்த குணம் பலராலும் பாராட்டப்பட்டது. அவரது ரசிகர்கள், கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அவரை ‘வள்ளல்’ என அழைத்தனர். இந்த நிலையில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த சின்னத்திரை நடிகர் புகழ் அவரைப் போலவே தன்னால் முடிந்தவரை தனது அலுவலகத்தில் மக்களுக்கு உணவளிப்பதாக கூறியிருந்தார். முதற்கட்டமாக தினமும் 50 பேருக்காவது உணவு வழங்குவேன் என அவர் தெரிவித்திருந்தார்.
35
தினமும் 50 பேருக்கு மதிய உணவு
அதன்படி கலைஞர் நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் தினமும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நற்செயலை கடந்த 500 நாட்களாக நடிகர் புகழ் செய்து வருகிறார். 500-வது நாளை முன்னிட்டு விஜயகாந்தின் நினைவிடத்திற்குச் சென்ற புகழ், அவரிடம் ஆசி பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்தின் நினைவிடத்தில் வந்து உங்களைப் போலவே ஏழைகளுக்கு உணவளிக்க போவதாக சொல்லி 500 நாட்களுக்கு முன்பு இந்த செயலை ஆரம்பித்தேன்.
கேப்டனின் அருளால் இதெல்லாம் நடந்து வருகிறது. 500-வது தினம் என்பதால் அவரிடம் ஆசி வாங்கிய பின்னர் ஏழை மக்களுக்கு உணவளிக்கப் போகிறேன். நான் இந்த செயலை ஆரம்பிக்கும் பொழுது பலரும் 10 அல்லது 20 நாள் மட்டுமே இவனால் உணவு வழங்க முடியும். அதன் பிறகு உணவு வழங்க முடியாது என்று கூறினார்கள். அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். என் காலத்திற்குப் பிறகும் என் குழந்தைகளும் இதை தொடர்வார்கள்.
55
இன்னமும் நிறைய செய்வேன்
இதே சாலிகிராமத்தில் உள்ள கடைகளில் வாட்டர் வாஷ் வேலை செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்டு இருக்கிறேன். அந்த வலிதான் இன்று மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. விஜயகாந்த் மறைந்த பொழுது அவரது அன்னதானத்தை பலரும் பாராட்டினர். எனவே நல்ல நிலையில் இருக்கும் நான் ஏழைகளுக்கு உதவலாம் என்ற நினைத்து தான் இந்த செயலை செய்ய ஆரம்பித்தேன். தற்போது 50 பேருக்கு மதியம் ஒரு வேளை உணவளித்து வருகிறேன். இன்னும் நிறைய வாய்ப்புகள் வந்து, அதில் நிறைய சம்பாதித்தால் மேலும் நிறைய உதவிகள் செய்வேன் எனக் கூறினார்.