லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதுதவிர மிஷ்கின், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர், கவுதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகை மேத்யூ தாமஸ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடிகர் மன்சூர் அலிகான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.
லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா தான் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையிலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரிலும் நடைபெற்றது. காஷ்மீரில் இரண்டு மாதங்கள் தங்கி படத்தின் பெரும்பாலான காட்சிகளை படம்பிடித்த படக்குழு, கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னைக்கு திரும்பியது.
லியோ படம் குறித்து சில தகவல்களும் தொடர்ந்து கசிந்த வண்ணம் உள்ளன. அப்படி கசிந்த ஒரு தகவல் தான் விஜய் சேதுபதி இப்படத்திற்காக பின்னணி குரல் கொடுக்க உள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்தில் பணியாற்றி வரும் இயக்குனர் ரத்னகுமாரும், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயன்படுத்திய கண்ணாடியின் புகைப்படத்தை பதிவிட்டதால், அவர் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிப்பதை சூசகமாக அறிவித்துள்ளார் என்று ரசிகர்கள் யூகித்து வந்தனர்.