
செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் அதற்கு முன்னர் வரை மாதத்திற்கு ஒரு ஹிட் படம் வருவதே அதிசயமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் விஜய்யின் கோட் தொடங்கி, ஹரிஷ் கல்யாண் நடித்த லப்பர் பந்து, கார்த்தியின் மெய்யழகன் போன்ற மூன்று ஹிட் படங்கள் வந்துள்ளன. இதே வெற்றி நடையுடன் அக்டோபர் மாதத்திலும் காலடி எடுத்து வைக்க உள்ளது கோலிவுட். அந்த வகையில் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள் பற்றி பார்க்கலாம்.
அக்டோபர் 4-ந் தேதி ரிலீசாகும் படங்கள்
அக்டோபர் 4ந் தேதி, இனியா, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன், ஆஜித் ஆகியோர் நடித்த சீரன், அயோதி பட புகழ் கல்லூரி வினோத் ஹீரோவாக நடித்த அப்பு, அர்ஜுன் இயக்கிய ஆரகன், சகாய நாதன் இயக்கத்தில் செந்தா நடித்த செல்ல குட்டி, சஞ்சனாவின் வேட்டைக்காரி, சம்யுக்தா விஜயன் இயக்கிய நீல நிறச் சூரியன் மற்றும் ஒரே பேச்சு ஒரே முடிவு என மொத்தம் 7 தமிழ் படங்கள் வருகிற அக்டோபர் 4ந் தேதி ரிலீஸ் ஆகின்றன.
அக்டோபர் 10ந் தேதி ரிலீசாகும் படங்கள்
அக்டோபர் 10ந் தேதி திரையரங்குகள் திருவிழாக் கோலம் ஆக உள்ளன. ஏனெனில் அன்றைய தினம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.
பொதுவாக ரஜினி படங்கள் ரிலீஸ் ஆனால் அதற்கு போட்டியாக தங்கள் படங்களை களமிறக்க நடிகர்கள் தயங்குவதுண்டு. ஆனால் வருகிற அக்டோபர் 10ந் தேதி ரஜினியின் வேட்டையன் படத்துக்கு போட்டியாக நடிகர் ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் நடித்த பிளாக் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... பிரபல நடிகையை துரத்தி.. துரத்தி காதலித்த ஆக்ஷன் அர்ஜுன்! தோல்வியில் முடிந்த சோகம்!
அக்டோபர் 18-ந் தேதி ரிலீசாகும் படம்
நடிகர் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ள படம் சுமோ. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஹாசிமின் இயக்கியுள்ள இப்படத்தில் மனோபாலா, விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 18ந் தேதி திரைக்கு வருகிறது.
அக்டோபர் 31ந் தேதி ரிலீசாகும் படங்கள்
அக்டோபர் 31ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மூன்று இளம் ஹீரோஸின் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி அக்டோபர் 31ந் தேதி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த பிரதர் படமும் அன்று தான் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்கி உள்ளார். இதோடு நடிகர் கவின் நடித்துள்ள பிளெடி பெக்கர் திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் தயாரித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... அட்டகத்தி தினேஷ் கலக்கிய ‘லப்பர் பந்து’ கெத்து கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது இந்த மாஸ் நடிகரா?