
சினிமாவை பொறுத்தவரை ஒருபடத்தின் வெற்றி என்பது அதன் வசூலை வைத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. சில படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவும், சில படங்கள் படு மோசமான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை வாரிக்குவித்து வெற்றிபெற்றுவிடும். அதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான் இங்கு பிரதானமாக பார்க்கப்படுகிறது. அதை வைத்து தான் நடிகர், நடிகைகளின் சம்பளமும் தீர்மானிக்கப்படுகிறது.
அந்த வகையில் சமீப காலமாக ஆயிரம் கோடி வசூல் என்பது தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளுக்கு அசால்டான ஒரு விஷயமாக மாறிவிட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் இத்தனை சூப்பர்ஸ்டார்கள் இருந்தும் இதுவரை ஒரு தமிழ் படம் கூட ஆயிரம் கோடி வசூலை எட்டிப்பிடித்ததில்லை. கோலிவுட்டில் அதிகபட்சமாக ரஜினியின் 2.0 திரைப்படம் 800 கோடி வசூலை எட்டியது. அதற்கு அடுத்தபடியாக ஜெயிலர் 650 கோடியும், விஜய்யின் லியோ 610 கோடியும் வசூலித்து இருந்தன.
பொதுவாகவே ஒரு படம் ஆயிரம் கோடி வசூல் ஈட்டுகிறது என்றால் அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அதன் புரமோஷன், மற்றொன்று சோலோ ரிலீஸ். இந்த இரண்டு சரியாக இருந்தால் ஈஸியாக அதை எட்டிவிட முடியும். உதாரணத்திற்கு அண்மையில் ஆயிரம் கோடி வசூல் அள்ளிய படங்களான கல்கி, ஜவான் ஆகிய படங்களுக்காக அப்படத்தின் நாயகர்கள் நாடு முழுக்க பயணித்து தங்கள் படத்தை புரமோட் செய்தனர்.
ஆனால் தமிழ் சினிமாவில் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது. இங்கு அஜித் போன்ற நடிகர்கள் புரமோஷனுக்கே வரமாட்டேன் என முரண்டு பிடிப்பதால் தான் அவர்களின் படங்களுக்கு போதுமான வசூல் கிடைப்பதில்லை. அதேபோல் நடிகர்கள் விஜய், ரஜினிகாந்த் போன்றவர்கள் ஆடியோ லாஞ்சுக்கு மட்டும் வந்து தலைகாட்டிவிட்டு செல்கிறார்கள். தமிழ்நாட்டை விட்டு வெளிமாநிலங்களுக்கு சென்று அவர்கள் புரமோட் செய்வதில்லை. அதுமட்டும் நடந்தால் கோலிவுட் அசால்டாக ஆயிரம் கோடி வசூலை எட்டிப்பிடித்துவிடும்.
இதையும் படியுங்கள்... சூர்யாவுடன் மோதலை உறுதி செய்த ரஜினிகாந்த்; 'வேட்டையன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அதேபோல் சோலோ ரிலீஸ் என்பது தமிழ்நாட்டில் அறிதான ஒன்றாகவே உள்ளது. தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் பெரிய பட்ஜெட் படங்கள் வந்தால் அதனுடன் எந்த படங்களும் ரிலீஸ் ஆகாது. ஆனால் இங்கு விஜய் படம் வந்தால் அதற்கு போட்டியாக அஜித் படத்தை வெளியிடுவது என போட்டி போட்டு ரிலீஸ் செய்கின்றனர். இதனால் தியேட்டகள் இரு படத்துக்கும் குறைவாகவே கிடைக்கும். அது இரண்டு படங்களின் வசூலையும் பாதிக்கும். வாரிசு - துணிவு படங்கள் ரிலீஸ் ஆனபோதே அப்படங்கள் தனித்தனியாக வந்திருந்தால் நல்ல வசூல் கிடைத்திருக்கும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக இருந்தது.
அந்த வகையில் இந்த ஆண்டு ஆயிரம் கோடி வசூல் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சூர்யாவின் கங்குவா, ரஜினியின் வேட்டையன் போன்ற படங்கள் இருந்தன. ஆனால் அதற்கு தற்போது வாய்ப்பே இல்லாதது போல் தெரிகிறது. ஏனெனில் சூர்யாவின் கங்குவா திரைப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீசாகும் என அறிவித்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக மற்றொரு பெரிய பட்ஜெட் படமான ரஜினியின் வேட்டையன் படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இப்படி இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் அதற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதோடு, வசூலும் பாதியாக குறைந்துவிடும். இப்படிப்பட்ட போட்டி மற்றும் பொறாமையால் தான் தமிழ் சினிமாவுக்கு ஆயிரம் கோடி வசூல் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. மற்றமொழிகளில் வெளியாகும் பான் இந்தியா படங்களைப் போல் தமிழ் படங்களும் பாலோ செய்தால் தான் ஆயிரம் கோடி வசூல் சாத்தியமாகும்.
இதையும் படியுங்கள்... கமலின் செல்லப்பிள்ளை... கோலிவுட் ஹிட்மேன் லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?