
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலுமே கோலோச்சிய நடிகை கே.ஆர். விஜயா. 1963-ம் ஆண்டு தனது திரை பயணத்தை தொடங்கிய அவர் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நடித்து வந்தார். தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்கள் அனைவருடனும் கே.ஆர்.விஜயா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என கிட்டத்தட்ட அனைத்து பெரிய நட்சத்திரங்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.. தனக்கென தனி ரசிக பட்டாளத்தையே அவர் உருவாக்கி வைத்திருந்தார்.
புன்னகை அரசி, தெய்வநாயகி என பல பெயர்களால் ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர். அவரின் கால்ஷீட்காக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்தனர். 70களில் அம்மன் கதாப்பாத்திரம் என்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸாக கே.ஆர். விஜயா தான் இருந்தார்.
திரைப்படங்கள் தவிர, அவர் இந்தியா மற்றும் இலங்கையில் ஒளிபரப்பான ராஜ ராஜேஸ்வரி மற்றும் குடும்பம் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கே.ஆர். விஜயா தனது நடிப்புத் திறமைக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். . 70களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் கே.ஆர்.விஜயாவும் ஒருவர். முதலில் கோடிகளில் சம்பளம் வாங்கிய தமிழ் நடிகை என்றால் அது கே.ஆர். விஜயா தான்.
1966-ம் ஆண்டு ஆண்டு பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான சுதர்சன் வேலாயுதன் என்பவரை கே.ஆர்.விஜயா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார். அவர் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நடிப்பையே மறக்கும் அளவுக்கு கே.ஆர்.விஜயா இருந்தார்.
அப்போது தேவர் ஃபிலிம்ஸின் சாண்டோ சின்னப்ப தேவர் அக்கா தங்கை என்ற படத்தை இயக்க முடிவு செய்தார். மேலும் அக்கா கேரக்டரின் சௌகார் ஜானகியையும், தங்கை கேரக்டரின் கே.ஆர்.விஜயாவையும் நடிக்க வைக்க முடிவு செய்தார்.
இதற்காக கே.ஆர். விஜயாவிடம் பேச அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கே.ஆர். விஜயாவும் அவரின் கணவர் சுதர்சனும் சாண்டோ சின்னப்ப தேவரை வரவேற்று வீட்டில் இருந்த ஒரு சோபாவில் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தனர். சாண்டோ சின்னப்ப தேவருக்கு அந்த சோபா மிகவும் பிடித்து போனதாகவும். அதில் உட்காரும் போது சுகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் தான் அக்கா தங்கை என்ற படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் தங்கை கேரக்டரின் கே.ஆர் விஜயா நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இப்போது நான் நடிப்பை விட்டு ரொம்பவே விலகிவிட்டேன், இப்போது நடிப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்று கண்கலங்கிக் கொண்டே தேவரிடம் கூறியுள்ளார். ஆனால் இவ்வளவு பெரிய நபர் வந்து கேட்கும் போது எப்படி மறுப்பது என்று நினைத்த கே. ஆர். விஜயாவின் கணவர், விஜயா கண்டிப்பா நடிப்பார் என்று தேவரிடம் கூறி உள்ளார்.
இதனை கேட்டு சந்தோஷத்துடன் தேவர் தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். தேவர் அலுவலகத்திற்கு போன சிறிது நேரத்திலேயே ஒரு லாரி வந்தது. அதில் கே.ஆர்.விஜயாவின் வீட்டில் இருந்த சோபா இருந்துள்ளது. கே.ஆர்.விஜயாவும் அவரின் கணவர் சுதர்சனும் இந்த சோபாவை கொடுக்க சொன்னார்கள் என்று கொடுத்துவிட்டு அவரிடம் கையெழுத்தும் வாங்கி சென்றுள்ளனர். அந்த சோபாவை தனது அலுவலகத்தில் போட்டு வைத்தார். எப்போது அலுவலகத்திற்கு சென்றாலும் அந்த சோபாவில் தான் அவர் அமர்வாராம். கே.ஆர். விஜயாவும் சுதர்சனும் எவ்வளவு தாராள குணம் கொண்டவர் என்பதை தேவர் புரிந்துகொண்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.