2025-ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்துவிட்டது. 6 மாதங்கள் நிறைவடைந்து அடுத்த 6 மாதத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளோம். தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதங்களில் வெளியான படங்களில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்தப்பட்டியலில் நான்கு படங்கள் மட்டுமே 100 கோடி என்கிற இமாலய வசூலை எட்டி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த நான்கு படங்களில் ஒரு படம் மட்டுமே 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்தப் படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
வசூலில் தூள் கிளப்பிய மதகஜராஜா
2025-ம் ஆண்டு அதிக வசூல் அள்ளிய படங்கள் பட்டியலில் சூரி நடித்த மாமன் திரைப்படம் 10ம் இடத்தில் உள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.55 கோடி வசூலித்துள்ளது. அடுத்ததாக 9வது இடத்தில் விஷாலின் மதகஜராஜா திரைப்படம் உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன மதகஜராஜா திரைப்படம் மொத்தம் ரூ.62 கோடி வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் இந்த பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் உலகளவில் ரூ.68 கோடி வசூலித்திருந்தது.
35
ரெட்ரோ வசூலை முந்திய தக் லைஃப்
2025-ம் ஆண்டு மே மாதம் சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் இந்த பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளது. இப்படம் ரூ.91 கோடி வசூலித்துள்ளது. அடுத்தபடியாக இதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன சூர்யாவின் ரெட்ரோ படம் 97 கோடி வசூல் உடன் 6ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த பட்டியலில் ஐந்தாம் இடம் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்துக்கு கிடைத்துள்ளது. மணிரத்னம் இயக்கிய இப்படம் 98 கோடி வசூலித்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது.
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்த குபேரா படம் 4ம் இடத்தில் உள்ளது. இதில் பிச்சைக்காரனாக நடித்திருந்தார் தனுஷ். இப்படம் உலகளவில் ரூ.125 கோடிக்கு மேல் வசூலித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் தமிழில் படுதோல்வி அடைந்தாலும் தெலுங்கில் வசூல் வேட்டையாடி வருகிறது. இதையடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு இந்த பட்டியலில் 3ம் இடம் கிடைத்துள்ளது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.138 கோடி வசூலித்து இருந்தது.
55
முதலிடத்தை தட்டி தூக்கிய குட் பேட் அக்லி
டாப் 10 அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.151 கோடி வசூலித்திருந்தது. அடுத்தபடியாக முதலிடத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.245 கோடி வசூலித்து, இந்த ஆண்டின் முதல் பாதியில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.