
2025ம் ஆண்டு தற்போது தான் தொடங்கியது போல் இருந்தது. ஆனால் அதற்குள் 6 மாதங்கள் கடகடவென ஓடிவிட்டன. இந்த ஆறு மாத காலகட்டத்தில் தமிழ் சினிமா பல்வேற்று ஏற்ற இறக்கங்களை சந்தித்து உள்ளது. குறிப்பாக இந்த 6 மாதத்தில் மொத்தம் 110 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. ஆனால் அதில் வெறும் 6 படங்கள் மட்டுமே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்துள்ளன. 4 படங்கள் முதலுக்கு மோசமின்றி தப்பித்துள்ளன. மற்றபடி 100 படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்துள்ளன. இதுவரை தமிழில் வெளியான ஒரு படம் கூட 250 கோடிக்கு மேல் வசூலிக்கவில்லை.
ஜனவரி மாதம் என்றாலே அனைவரும் டார்கெட் செய்வது பொங்கல் விடுமுறையை தான். அப்படி இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான், விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா, ரவி மோகன் நடித்த காதலிக்க நேரமில்லை, ஷான் நிகாம் நடிப்பில் உருவான மெட்ராஸ்காரன் ஆகிய புதுப்படங்கள் திரைக்கு வந்தாலும், அதற்கு போட்டியாக சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த விஷாலின் மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் ஆகி அனைத்து படங்களையும் வாஷ் அவுட் ஆக்கியது. ஜனவரியில் வெளியான படங்களில் மத கஜ ராஜா மற்றும் குடும்பஸ்தன் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே வெற்றியடைந்தன. மற்ற படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவின.
பிப்ரவரி மாதம் தான் தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்ட படம் ரிலீஸ் ஆனது. அது வேறெதுவுமில்லை அஜித்தின் விடாமுயற்சி தான். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 6ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.137 கோடி வசூலித்தாலும் பட்ஜெட்டில் பாதிகூட வராததால் படுதோல்வியை சந்தித்தது. பின்னர் காதலர் தினத்தன்று 9 படங்கள் ரிலீஸ் ஆகின. அந்த 9 படங்களும் தோல்வியை சந்தித்தன.
பிப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் ஒரு வெற்றிகூட கிடைக்காமல் தத்தளித்த கோலிவுட்டுக்கு பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் ஆறுதல் தந்தது. அஸ்வத் மாரிமுத்து இயக்கிய அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்துக்கு போட்டியாக தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து ரிலீஸ் ஆன ஆதியின் சப்தம் படமும் பிளாப் ஆனது.
பிப்ரவரியிலாவது ஒரு ஹிட் படம் வந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் கோலிவுட்டுக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த கிங்ஸ்டன் படம் திரைக்கு வந்தது. ஆனால் அப்படம் ரசிகர்களை கவரவில்லை. அடுத்ததாக யுவன் தயாரிப்பில் ரியோ நடித்த ஸ்வீட் ஹார்ட் படம் ரிலீஸ் ஆனது. அப்படமும் வசூலில் தோல்வியை சந்தித்தது. இறுதியாக விக்ரம் நடித்த வீர தீர சூரன் படம் திரைக்கு வந்தது. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் மிகவும் மந்தமாகவே இருந்தது. இப்படம் வெற்றியடையாவிட்டாலும் முதலுக்கு மோசமின்றி தப்பித்தது.
ஏப்ரல் மாதம் நடிகர் அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான குட் பேட் அக்லி ரிலீஸ் ஆனது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்திருந்த இப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது. குட் பேட் அக்லி திரைப்படம் ரூ.240 கோடி வசூலித்தது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் குட் பேட் அக்லி படைத்துள்ளது.
குட் பேட் அக்லி தவிர ஏப்ரலில் சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில் உருவான கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படம் காமெடியில் சொதப்பியதால் இதற்கு வெற்றி கிட்டவில்லை. இதுதவிர சிபிராஜ் நடித்த டென் ஹவர்ஸ் திரைப்படமும் ஏப்ரலில் தான் ரிலீஸ் ஆனது. தியேட்டரில் வரவேற்பை பெறாத இப்படம் ஓடிடியில் சூப்பர் ஹிட் ஆனது.
கோடை விடுமுறை என்பதால் மே மாதத்தில் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த மாதத்தில் மட்டும் 26 படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் மே 1ந் தேதியே சூர்யா நடித்த ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இதில் ரெட்ரோ படம் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் முதலுக்கு மோசமின்றி தப்பித்தது. ஆனால் அதற்கு போட்டியாக ரிலீஸ் ஆன டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் அதிரி புதிரியான வெற்றியை ருசித்தது. இப்படம் கிட்டத்தட்ட 90 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது.
அடுத்தபடியாக மே 16ந் தேதி திரைக்கு வந்த சூரியின் மாமன் திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வெற்றி வாகை சூடியது. இப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது. அதேபோல் மே மாத இறுதியில் திரைக்கு வந்த விஜய் சேதுபதியின் ஏஸ் படமும் பிளாப் பட்டியலில் இணைந்தது.
ஜூன் மாதம் கோலிவுட்டுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கமல்ஹாசனின் தக் லைஃப் ஜூன் மாதம் 5ந் தேதி ரிலீஸ் ஆகி அட்டர் பிளாப் ஆனது. இப்படம் 100 கோடி கூட வசூலிக்கவில்லை. இதற்கு அடுத்தபடியாக தனுஷின் குபேரா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 20ந் தேதி ரிலீஸ் ஆனது.
குபேரா படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தாலும் தமிழில் படுதோல்வியை சந்தித்தது. குபேராவுக்கு போட்டியாக ரிலீஸ் ஆன அதர்வாவின் டிஎன்ஏ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இறுதியாக ஜூன் மாத கடைசியில் ரிலீஸ் ஆன விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வருகிறது.