சிறு வயதில் இருந்தே, ஒரு டான்சராக வர வேண்டும் என்கிற ஆசையில், திரைப்படங்களை பார்த்து தன்னுடைய நடன திறமையை மெருகேற்றி கொண்டவர் தான் ரமேஷ். கூலி வேலை செய்யும் இவரின் அபார திறமையை வெளிக்கொண்டு வரும் விதமாக இவருடைய நண்பர்கள் மற்றும் அவரின் ஏரியாவில் வசிக்கும் இளைஞர்கள் இவரின் டான்ஸ் வீடியோவை எதார்த்தமாக டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் வெளியிட, அவரை வைரலாக பார்க்கப்பட்டு இவரின் திறமையை உலகறிய செய்தது.
மேலும் அவ்வப்போது, பல ஊடகங்களுக்கும் இவர் பேட்டி கொண்டு வந்த நிலையில், இவரின் திறமைக்கு சில திரைப்படங்களில் சிறு வேடங்களிலும், டான்ஸ் ஆடவும் வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, 'துணிவு' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த டான்சர் ரமேஷ், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும், 'ஜெயிலர்' படத்திலும் ஒரு டான்ஸ் ஆடியுள்ளார். அடுத்தடுத்து வாய்ப்புகள் இவரின் கதவை தட்ட துவங்கிய நிலையில், திடீர் என இவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கேபி பார்க் குடியிருப்பு பகுதியின், பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் டான்சர் ரமேஷ். மேலும் இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.