இளையராஜா என்று சொன்னதும் நமது நினைவுக்கு வருவது அவரின் பாடல்கள் தான். காலம் கடந்து கொண்டாடும் வகையில் ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் இளையராஜா. அவரது இசைக்கு அடிமையாகாத ஆட்களே இருக்க முடியாது, அந்த அளவுக்கு தன்னுடைய உணர்வுப்பூர்வமான இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இளையராஜா, ஒரு சில இயக்குனர்களோடு இணைந்தால் அப்படத்தின் பாடல்கள் செம ஹிட்டாகி விடும். அப்படி ஒரு காம்போ தான் இளையராஜா - மணிரத்னம் கூட்டணி.
24
இளையராஜா - மணிரத்னம் கூட்டணி
இளையராஜாவும் - மணிரத்னமும் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய படம் பல்லவி அனுபல்லவி. கன்னட படமான இது பெரியளவில் ஹிட்டாகாவிட்டாலும் அப்படத்தின் பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றன. இதையடுத்து தமிழில், பகல் நிலவு படம் மூலம் இருவரும் இணைந்து பணியாற்றினர். அப்பட பாடல்களும் ஹிட்டானதால் அடுத்தடுத்து இதய கோவில், மெளன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி என தொடர்ச்சியாக 7 படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றினர். இப்படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன.
34
அஞ்சலி பட பாடல் சீக்ரெட்
தொடர்ந்து கமல், மோகன், முரளி, கார்த்திக் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த மணிரத்னம், கடந்த 1990-ம் ஆண்டு குழந்தைகளை மையமாக வைத்து இயக்கிய படம் தான் அஞ்சலி. இப்படத்தில் ரகுவரன், ரேவதி போன்றவர்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்து இருந்தார். அவரின் இசை அஞ்சலி படத்திற்கு பலம் சேர்த்திருந்தது. இப்படத்திற்காக இசையில் பல்வேறு புதுமைகளையும் புகுத்தி இருந்தார் இளையராஜா.
அஞ்சலி படத்தில் இடம்பெற்ற அஞ்சலி அஞ்சலி என்கிற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த பாடலில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. குழந்தைகள் பாடும் பாடல் என்பதால், அந்த சமயத்தில் தன் வீட்டு குட்டீஸ் ஆக இருந்த யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம் ஜி, பார்த்தி பாஸ்கர், ஹரி பாஸ்கர் ஆகியோரை பாட வைத்திருக்கிறார் இளையராஜா. இப்படி இளையராஜா குடும்பமே ஒன்று சேர்ந்து பாடிய இந்த பாடல் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.