
டோலிவுட் திரையுலகில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான், பழம்பெரும் நடிகை ரோஜா ரமணியின் மகன் தருண். தமிழில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1990-ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது.
இதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த தருண்... பின்னர் கல்லூரி படிப்பை முடித்ததும் ஹீரோவாக நடிக்க துவங்கினார். 2000-ஆம் ஆண்டு தெலுங்கில், தொடர்ந்து காதல் சப்ஜெட் படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கிய தருண், இதன் பின்னர் தமிழில் 2022-ஆம் ஆண்டு, 'புன்னகை தேசம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே மிகவும் எதார்த்தமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். தமிழை விட தெலுங்கு படங்களில் மட்டுமே இவர் அதிகம் நடித்தாலும், இவர் தமிழில் ஹீரோவாக நடித்த எனக்கு 20 உனக்கு 18, போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கு திரையுலகில் லவ்வர் பாய் என்கிற இமேஜுடன் மின்னிய, தருண் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்தார். ஆரம்பத்தில் இவர், நடிகை ரோஜா ரமணியின் மகன் என்பது பலருக்கும் தெரியாத நிலையில் பின்னரே இவரை பற்றிய தகவல்கள் வெளியானது. எப்படி சரசரவென முன்னணி இடத்தை நோக்கி நகர்த்தாரோ அதே வேகத்தில், தருணின் தோல்வியும் இருந்தது தான் அதிர்ச்சியின் உச்சம்.
தருண் சரியான, திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க தவறியதே இவரின் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டது. ஆர்த்தி அகர்வால் உடன், காதல் சர்ச்சை ஒருபக்கம் சென்று கொண்டிருந்த நிலையில்... இவரின் காதல் வாழ்க்கையில் தலையிட்டு அது தோல்வியில் முடிய காரணமும் தருணின் அம்மா ரோஜா ரமணி என கூறப்பட்டது. அதே போல் இவர் நடிக்கும் திரைப்படத்தின் கதைகளிலும் ரோஜா ரமணியின் தலையீடு இருந்ததால் தான் பல நல்ல கதைகளை இவர் நிராகரித்து, இவருடைய திரையுலக வாழ்க்கை வீழ்ச்சியை எட்டியதாக ஒரு வதந்தி பரவி வந்தது.
இதுபோன்ற வதந்திகளுக்கு, தருண் தற்போது பதிலளித்துள்ளார். அதாவது நான் தோல்வி படங்களை தேர்வு செய்து நடித்ததற்கு ஒருபோதும் என் தாயார் காரணமாக மாட்டார். பொதுவாக என் படங்களின் ஸ்கிரிப்ட்டை வீட்டில் கேஷுவலாக அனைவருடனும் விவாதம் செய்வேன். மற்றவர்கள் என்ன சொன்னாலும், இறுதி முடிவு என்னுடையதாக மட்டுமே இருக்கும்.
என்னுடைய கதைகளை அம்மா தான் செலக்சன் செய்கிறார் என்பதில் உண்மையல்ல என்று கூறியுள்ளார். தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே ஓகே செய்வேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இவர் கொடுத்த பேட்டி ஒன்றில், நான் யாருடனும் காதலில் விழவில்லை, பிரெண்ட்ஷிப் உள்ளது, சிலருடன் அது அதிகமாக இருக்கும், ஒன்றாக வெளியே போயிருக்கிறோம், பேசுவோமே தவிர, அது காதலல்ல என கூறியுள்ளார்.
அதே போல் தருண் மீண்டும் ரீ-என்ட்ரிக்கு பிளான் செய்து கொண்டிருக்கிறாராம். சமீபத்தில் ஒரு யூடியூப் உடன் பேசுகையில், தற்போது திரைப்படங்களுக்கு சம்பந்தப்பட்ட வேலை நடந்து கொண்டிருக்கிறது, விரைவில் ரீ-என்ட்ரி கொடுக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இரண்டு திரைப்படங்கள், ஒரு வெப் சீரிஸுக்கு சம்பந்தப்பட்ட வேலை நடந்து கொண்டிருக்கிறது என்றார். இந்த ஆண்டு தன்னுடைய தரமான கம் போக்கை கொடுப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.