ஜூலை 11ந் தேதி விமல் நடித்த தேசிங்கு ராஜா 2 முதல் விஷ்ணு விஷாலின் சகோதரர் நடித்த ஓஹோ எந்தன் பேபி திரைப்படம் வரை என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
ஜூன் மாதம் தமிழ் சினிமாவுக்கு சொதப்பலானதாக இருந்த போதிலும், ஜூலை மாதம் சற்று நம்பிக்கை தரும் மாதமாகவே இருந்து வருகிறது. இம்மாதம் முதல் வாரத்தில் சித்தார்த் நடித்த 3 பி.ஹெச்.கே, ராம் இயக்கிய பறந்து போ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படங்களுக்கான வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், ஜூலை 11ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜூலை 11ந் தேதியன்று 3 தமிழ் படங்களும், ஜூலை 10ந் தேதி ஒரு தமிழ் படமும் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
25
ப்ரீடம்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள திரைப்படம் ப்ரீடம். இப்படத்தை சத்யசிவா இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் கழுகு படத்தை இயக்கியவர். இப்படத்தில் நடிகர் சசிகுமார் உடன் லிஜோ மோல் ஜோஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விஜய கணபதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 1991-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார்களாம். ஜிப்ரான் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூலை 10ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
35
தேசிங்கு ராஜா 2
எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் தேசிங்கு ராஜா. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படத்திலும் விமல் தான் நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா ஆகியோர் இதில் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும் விஜய் டிவி புகழ், சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 11ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ள மற்றொரு திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. இப்படத்தை கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக ருத்ரா நடித்துள்ளார். இவர் நடிகர் விஷ்ணு விஷாலின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இப்படத்தில் ஹீரோயினாக மிதிலா பால்கர் நடித்திருக்கிறார். மேலும் ரெடின் கிங்ஸ்லி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்து உள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படமும் ஜூலை 11 அன்று திரைக்கு வருகிறது.
55
Mrs and Mr திரைப்படம்
ஜூலை 11ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள மற்றொரு திரைப்படம் Mrs and Mr. இப்படத்தை பிக்பாஸ் பிரபலம் ஜோவிகா தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக ராபர்ட் மாஸ்டரும், ஹீரோயினாக வனிதா விஜயகுமாரும் நடித்துள்ளனர். மேலும் கிரண் ரத்தோடு, ஸ்ரீமன், ஷகீலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் முன்னாள் காதலர்களான வனிதாவும், ராபர்ட் மாஸ்டரும் இணைந்து நடித்துள்ளதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை வனிதா விஜயகுமார் தான் இயக்கி உள்ளார்.