ஒரு சினிமா உருவாவதற்கு பின்னணியில் பல துறைகள் இருக்கின்றன. மேக்கப், ஆர்ட் டிபார்ட்மெண்ட், கேமரா டீம், ஆடைகளுக்கென ஒரு தனி டீம், ஸ்டண்ட் டீம் என பல துறைகள் பின்னணியில் பணியாற்றுகின்றனர். அதில் அதிகம் ரிஸ்க் எடுத்து வேலை பார்ப்பவர்கள் தான் ஸ்டண்ட் கலைஞர்கள். 100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் அந்தரத்தில் பறந்து பறந்து சண்டை போட பெரும்பாலும் டூப் போட்டு தான் நடிப்பார்கள். அத்தகைய ரிஸ்க் நிறைந்த சண்டைக்காட்சிகளில் நடிப்பது ஸ்டண்ட் மேன்கள் தான். இப்படி உயிரையே பணயம் வைத்து வேலை பார்க்கும் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு போதிய இன்சூரன்ஸ் வசதி செய்து தரப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
24
ஸ்டண்ட் மேன் எஸ்.எம்.ராஜு மரணம்
இந்த விவகாரம் இவ்வளவு பூதாகரமாக வெடித்துள்ளதற்கு முக்கிய காரணம் எஸ்.எம்.ராஜு என்கிற ஸ்டண்ட் கலைஞரின் மரணம் தான். இவர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் கார் சேஸிங் காட்சியில் நடித்து வந்தார். இதில் எதிர்பாராமல் விபத்தில் சிக்கிய ராஜு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் எஸ்.எம் ராஜு தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் ஸ்டண்ட் மேனாக பணியாற்றி இருக்கிறார். பல ரிஸ்க் ஆன ஸ்டண்ட் காட்சிகளை அசால்டாக செய்து அசத்துவாராம்.
34
உதவிக்கரம் நீட்டிய அக்ஷய் குமார்
எஸ்.எம்.ராஜுவின் மறைவுக்கு பின்னர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஸ்டண்ட் யூனியனில் முறையாக பதிவு செய்த 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் தொகையை தான் செலுத்த முன்வந்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அக்ஷய் குமாரின் இந்த உதவியைத் தொடர்ந்து தமிழ் நடிகர்கள் யாரும் ஏன் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு உதவுவதில்லை என்கிற கேள்வி சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் சூர்யா, ஸ்டண்ட் கலைஞர்களுக்கு சத்தமே இல்லாமல் உதவி வரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான சில்வா தான் இந்த தகவலை பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார். அதன்படி நடிகர் சூர்யா, கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டண்ட் கலைஞர்களின் மருத்துவ காப்பீட்டிற்காக வருடந்தோறும் ரூ.10 லட்சம் கொடுத்து வருவதாகவும் அவரின் இந்த முயற்சியை பார்த்த பின்னர் தான் மற்ற தயாரிப்பாளர்களும் ஸ்டண்ட் மேன்களுக்கு உதவ முன் வந்ததாக சில்வா தெரிவித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் வெளியுலகுக்கு தெரியாமல் சூர்யா செய்து வரும் இந்த உதவி பற்றி அறிந்ததும், இவர் தான் கோலிவுட்டின் மனித கடவுள் என சூர்யாவை பாராட்டி வருகிறார்கள். இதுமட்டுமின்றி அகரம் என்கிற அறக்கட்டளை மூலம் ஏராளமான ஏழை எளிய மாணவ, மாணவிகளை நடிகர் சூர்யா படிக்க வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.