கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருவதன் காரணமாக தான் நடிகை நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என மக்கள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் அவர் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் கனெக்ட். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திரில்லர் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.
மாயா, கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆன இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்து உள்ளனர்.
கனெக்ட் வெறும் 99 நிமிடம் ஓடக்கூடிய திரில்லர் படமாகும். நீளம் குறைவாக உள்ளதன் காரணமாக இப்படத்தை திரையரங்குகளில் இடைவெளி இன்றி திரையிடப்பட உள்ளது.
கனெக்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்காக புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இதில் நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்து கலந்துகொண்டார். இவர்களுடன் ஏராளமான திரைப்பிரபலங்களும் படத்தை பார்த்து ரசித்தனர்.