சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தொடங்கி, பின்னர் தொகுப்பாளராக உயர்ந்து, தற்போது வெள்ளித்திரையில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் வரை 15 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ளார்.
இவற்றுள் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தது அனிருத் மற்றும் டி. இமான் தான். சிவகார்த்திகேயனின் சினிமா கெரியர் உயர இவர்களது இசையும் முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இவர்கள் இருவரின் இசையில் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் அனைத்திலும் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டாகி உள்ளன.
தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இவர் கைவசம் டான், அயலான் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமாருடன் ஒரு படம் மற்றும் தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக கமிட்டாகி உள்ளார் சிவா. இவற்றுள் டான் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதுதவிர இவர் கைவசம் உள்ள 3 படங்களுக்கு வெவ்வேறு இசையமைப்பாளர்களே இசையமைக்க உள்ளனர். அதன்படி அயலான் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானும், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள தெலுங்கு படத்துக்கு தமனும், ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் இயக்க உள்ள படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜும் இசையமைக்க உள்ளனர்.
சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய அனிருத் மற்றும் டி. இமானை அவர் திடீரென கழட்டிவிட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதே நிலை தொடருமா அல்லது மீண்டும அவர்களுடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைப்பாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.