உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், கடைசியாக முடிந்த 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர். சமீப காலமாக ஓடிடி தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால் அதில் படங்களை நேரடியாக வெளியிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இல்லாமல் 42 நாட்கள் மட்டுமே ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்றி, ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்து உள்ளனர்.
நேற்று பிரம்மாண்டமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் ஆகிய 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கனவே நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கியவர்கள் என்பதால், இந்நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது.
மேலும் இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் ஏன் என அறிமுக நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். அதன்படி “எடிட் பண்ணித் தானே போடுறாங்க.. மற்ற நேரங்கள்ல எல்லாம் என்ன நடந்ததுனு காட்டினா தானே உண்மை என்னனு தெரியும் என்று நிறைய பேர் கேட்டீர்கள். உங்கள் ஐடியாவைத் தான் தற்போது செயல்படுத்தியி உள்ளார்கள்” என கமல் கூறினார்.
ஒருவேளை 24 மணி நேரமும் இந்நிகழ்ச்சியை பார்க்க முடியாதவர்கள், அதனை சிறப்பு தொகுப்பாக காணவும் ஒரு வழி உள்ளதாம். அதன்படி தினந்தோறும் இரவு 9 மணிக்கு சிறப்பு 1 மணி நேர தொகுப்பு ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.