
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்துள்ள படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள முதல் படம் இதுவாகும். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். இவர் இதற்கு முன்னர் ரங்கூன் படத்தை இயக்கி இருந்தார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.
அமரன் திரைப்படம் முன்னாள் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், அவரின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். அமரன் திரைப்படம் தீபாவளி விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... அமரன் முதல் லக்கி பாஸ்கர் வரை; தீபாவளி ரிலீஸ் படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?
அமரன் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் பார்த்து கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக முதல் மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக அமரன் படம் பார்த்து படக்குழுவை பாராட்டினார். பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் பார்த்த கையோடு சிவகார்த்திகேயன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் அமரன் படம் பார்த்து பாராட்டி இருந்தார்.
இப்படி பிரபலங்களின் பாராட்டு மழையில் நனையும் அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. இப்படம் மூன்றே நாட்களில் 100 கோடி வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டியது. அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களே 3 நாட்களில் 100 கோடி வசூலை இதுவரை எட்டிப்பிடிக்காத நிலையில், சிவகார்த்திகேயன் அதை சாதித்து காட்டியுள்ளார். டாக்டர், டான் படத்துக்கு பின்னர் அவரின் மூன்றாவது 100 கோடி வசூல் படமாக அமரன் உள்ளது.
மூன்று நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்த அமரன் திரைப்படம் நான்காம் நாளான நேற்றும் அதன் வசூல் வேட்டையை தொடர்ந்திருக்கிறது. அதன்படி நேற்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினம் என்பதால் இப்படம் 30 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் நான்கு நாட்களில் அமரன் திரைப்படம் ரூ.140 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் இப்படம் 200 கோடி வசூலை அசால்டாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கண்ணா சும்மா பின்னிட்ட! 'அமரன்' பார்த்த கையேடு சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!