அப்போ தட்டிக்கொடுக்க யாருமே இல்ல... இப்போ வேறமாதிரி வந்திருக்கேன்- ‘பத்து தல’ விழாவில் சிம்புவின் ஃபயர் ஸ்பீச்

First Published Mar 19, 2023, 9:22 AM IST

பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிம்பு என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பத்து தல இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியதாவது : “நான் இங்கு வரும்போது என் மனதில் ஓடிக்கொண்டிருந்த ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், மேடையில் அழுதுவிடக்கூடாது என்பதுதான். படத்துல சின்னதா செண்டிமெண்ட் சீன் வந்தா கூட அழுதிடுவேன். ஆனா என் ரசிகர்களுக்காக அழக்கூடாதுனு நினைச்சேன். ஏன்னா நிறைய கஷ்டங்களை பாத்தாச்சு, இனிமே சந்தோஷமா இருக்கனும்.

ஒரு கஷ்டமான சூழல்ல இருந்தப்போ, சினிமாவையெல்லாம் விட்டுட்டு போயிடுவோம்னு ஒரு மனநிலையில் இருந்தேன். அப்போ தான் மஃப்டி என்கிற கன்னட படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக சொன்னார் ஞானவேல். கன்னடத்தில் ஒரு லெஜண்ட் ஆக இருக்கும் ஷிவ ராஜ்குமார் நடிச்ச கேரக்டர்ல கண்டிப்பா என்னால நடிக்க முடியாதுனு நினைச்சேன். 

இந்த படத்தில் நடிக்க நான் ஒத்துக்கொண்டதற்கு காரணம் கவுதம் கார்த்திக் தான். ஒரு சின்ன படமாக இருந்தாலும் சரி, பெரிய படமாக இருந்தாலும் சரி, யார் படமாக இருந்தாலும் கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்கனா உடனே அவங்கள கூப்பிட்டு பாராட்டிவிடுவேன். அது ஏன்னு என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள். ஏன்னா, இங்க தட்டிவிடுறதுக்கு நிறைய பேர் இருக்காங்க, தட்டி கொடுக்குறதுக்கு யாருமே இல்லை. எனக்கு தட்டி கொடுக்குறதுக்கு என் ரசிகர்கள் மட்டும் தான் இருந்திருக்காங்க.

இந்த படம் எனக்கு வெற்றி கிடைக்குதோ இல்லையோ, கவுதமிற்கு இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். இதற்காக நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன். முதலில் இந்த படத்தில் நடிச்சப்போ குண்டாக இருந்தேன். அந்த கேரக்டருக்கும் அது செட் ஆகிவிட்டது. பின்னர் இது கிடப்பில் போடப்பட்ட சமயத்தில் நான் ஒல்லியாகி மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களில் நடிச்சு முடித்த பிறகு, மீண்டும் பத்து தல படத்தில் நடிக்கனுமா என்கிற மனநிலையில் தான் இருந்தேன். பின்னர் கவுதமிற்கு வாக்கு கொடுத்த காரணத்தினால் நடிக்க முடிவு செய்தேன்.

அப்போ இயக்குனர் ஒபிலி என்னிடம் வந்து சார் இந்த கேரக்டருக்காக நீங்க குண்டாகனும்னு சொன்னார். ஏன்யா உனக்கு மனசாட்சியே இல்லையா, ஒவ்வொரு கிலோவும் குறைக்க நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும்னு சொன்னேன். அப்புறம் அந்த ஒல்லியான உடம்புடன் போட்டோஷூட் பண்ணி பார்த்தப்போ ஸ்கூல் பையன் மாதிரி இருந்துச்சு. அதுக்கப்புறம் தான் உடல் எடையை அதிகரிக்க முடிவு செய்து. இப்படத்திற்காக வெயிட் போட்டேன்.

இதையும் படியுங்கள்... Watch : இங்க எவன் ஆளனும்னு நான்தான்டா முடிவு பண்ணுவேன்... தெறிக்கவிடும் சிம்புவின் ‘பத்து தல’ டிரைலர்

இந்த படத்துல எனக்கு ஜோடி கிடையாது. என்னைக்குமே எனக்கு துணை என் ரசிகர்களான நீங்கள் தான். படத்துலையும் ஜோடி இல்லை லைஃப்லையும் ஜோடி இல்ல. அதைப்பற்றி பிரச்சனை இல்ல. ஜில்லுனு ஒரு காதல் படத்தை நான் தான் பண்ண வேண்டியது. ஆனா அது வேற ஒரு கதை. அப்போ கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனது. இவ்ளோ வருஷம் கழிச்சு இப்போ தான் நடந்திருக்கு. அப்போ பண்ணிருந்தா ஒத்த தல தான் கிடைச்சிருக்கும். இப்போ உங்களுக்கு பத்து தல கிடைச்சிருக்கு.

ஏ.ஆர்.ரகுமான் என்னுடைய காட்ஃபாதர். அவருக்கு என்மேல அப்படி என்ன ஒரு அன்புனு தெரியல. ஆன்மீக ரீதியாகவும் எனக்கு ஒரு குருவாக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 படம் கிட்ட நடிச்சிட்டேன். என்னுடைய எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கும் என் தாயும், தந்தையும் வந்ததில்லை. ஆனா இன்னைக்கு வந்திருக்காங்க. அவங்க இன்னைக்கு வந்துக்கான காரணம் என்னுடைய ரசிகர்கள் தான்.

சமீப காலமாக ரொம்ப அமைதியா பேசுறீங்க. முன்பைப்போல சவுண்டு இல்ல, ஃபயரா பேச மாட்டுறீங்கனு நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க. அதற்கு காரணம், அப்போ கஷ்டத்துல இருந்தேன். எதுவுமே சரியா அமையல. தட்டிக்கொடுக்க யாரும் இல்ல. இனிமே பெருசா பேசுறதுக்கு ஒன்னுமே இல்ல. செயல் மட்டும் தான். என் ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இனிமே நீங்க சந்தோஷமா இருங்க, மத்ததையெல்லாம் நான் பாத்துக்கிறேன். நான் கஷ்டத்துல இருக்கும் போது நீங்க எனக்காக பண்ணது போதும், இனிமே நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க. இப்போ நான் சாதரணமா வரல. வேறமாதிரி வந்திருக்கேன். விடவே மாட்டேன். என் ரசிகனை தலைகுனிய விடவே மாட்டேன். தமிழ்சினிமாவை உலக அளவுக்கு கொண்டு போவேன்” என பேசினார்.

இதையும் படியுங்கள்... பத்து தல ஆடியோ லாஞ்சில் திடீரென வல்லவனாக மாறி... வெறித்தனமாக டான்ஸ் ஆடிய சிம்பு - வைரல் வீடியோ

click me!