சிறு வயதில் திருமணம் ஆனது முதல் நக்சலைட் ஆக ஆசைப்பட்டது வரை சில்க் ஸ்மிதா பற்றி பலரும் அறிந்திடாத சில தகவல்கள்

First Published Dec 2, 2022, 8:10 AM IST

தென்னிந்திய திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ள சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தென்னிந்திய திரையுலகின் கனவுக் கன்னியாக திகழ்ந்த நடிகை சில்க் ஸ்மிதா, கடந்த 1960-ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஏலூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் கடந்த 1979-ம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம் என்கிற படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் சில்க் என்கிற கதாபாத்திரத்தில் மதுபான விடுதி மங்கையாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் பாப்புலர் ஆன அவரை ரசிகர்கள் செல்லமாக சில்க் என அழைக்கத் தொடங்கினர். பின்னர் அதுவே அவரது அடையாளமாகவே மாறிவிட்டது.

கிறங்க வைக்கும் அழகுக்கும், மயக்கும் பார்வைக்கு சொந்தக்காரியாக இருந்து வந்த சில்க் ஸ்மிதா, கொஞ்சம் கொஞ்சமாக தென்னிந்திய திரையுலகின் கவர்ச்சி ராணியாக வலம் வரத் தொடங்கினார். சில்க் ஸ்மிதா ஒரு சீனிலாவது நடித்தால் தான் படம் ஹிட் ஆகும் என சொல்லும் அளவுக்கு தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார் சில்க்.

தென்னிந்திய திரையுலகில் கோலோச்சிய பின்னர் பாலிவுட் பக்கமும் சென்று அங்கும் படங்களில் நடித்தார் சில்க். ஐட்டம் டான்ஸ், சின்ன சின்ன வேடங்கள் என மொத்தமாக 400-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். புகழும், பணமும் இவருக்கு எவ்வளவு வேகமாக கிடைத்ததோ, அதே வேகத்தில் அவரது வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. இவர் 35 வயதிலேயே தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள்... தற்கொலை செய்து கொண்ட நடிகை சில்க் ஸ்மிதா.. இறுதி நேர உருக்கமான கடிதம்!

இவரது இளமைக்காலம் என்று பார்த்தால், சிறுவயதில் இருந்தே ஏழ்மையை மட்டுமே பார்த்து வந்த சில்க் ஸ்மிதாவை சிறு வயதிலேயே வயதான ஒருவருடன் திருமணம் செய்துவைத்துள்ளனர். கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் வீட்டில் இருந்து தப்பியோடி சென்னை வந்துள்ளார் சில்க். ஹீரோயின் ஆசையுடன் வந்த இவருக்கு, முதலில் மேக் அப் கலைஞராக தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

வண்டிச்சக்கரம் என்கிற படத்தில் அவரை பாரில் வேலை செய்யும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார் வினு சக்கரவர்த்தி. இதன்மூலம் தான் அவரது சினிமா பிரவேசம் அரங்கேறி உள்ளது. இவர் நடிகையாக இருந்தாலும் நக்சல் அமைப்பு மீது மிகுந்த மதிப்பு கொண்டவராக இருந்தாராம் சில்க். ஒரு பேட்டியின் போது நீங்க நடிகை ஆகலேனா என்ன ஆகி இருப்பீங்க என செய்தியாளர் கேட்டதற்கு, சட்டென நான் நக்சலாக ஆகி இருப்பேன் என சொன்னாராம் சில்க்.

நடிகை சில்க் ஸ்மிதாவின் சினிமா வாழ்க்கை 17 வருடத்தில் முடிவுக்கு வந்தாலும், அந்த குறுகிய காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் சுமார் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்றளவும் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார் சில்க். அவரின் பிறந்தநாளான இன்று அவரைப்பற்றிய நினைவுகளை பகிர்ந்து அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்...  அடிச்சு டார்ச்சர் பண்ணிய கணவர்... ஐட்டம் டான்ஸ் ஆட ரூ.50 ஆயிரம் - சோகங்கள் நிறைந்த சில்க் ஸ்மிதாவின் மறுபக்கம்

click me!