மாநாடு தந்த மவுசு
உடல் எடையை குறைத்த பின்னர் நடிகர் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான மாநாடு திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானதால், இவரது நடிப்பில் தற்போது தயாராகி வரும் படங்களுக்கான மவுசும் அதிகரித்து உள்ளது.
வெந்து தணிந்தது காடு ரெடி
நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படம் தயாராகி வருகிறது. கவுதம் மேனன் இயக்கும் இப்படத்திற்காக நடிகர் சிம்பு 20 கிலோ வரை உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேசன் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
அடுத்தது பத்து தல
இதுதவிர பத்துதல படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்குகிறார். இதில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
கோகுல் இயக்கத்தில் சிம்பு
இதையடுத்து கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் சிம்பு. கோகுல் இயக்கத்தில் உருவாக இருந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியும், வில்லனாக பகத் பாசிலும் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்து வந்தார்.