சந்தோஷ் நாராயணன் உடன் சண்டை... சார்பட்டா 2-விற்காக இசையமைப்பாளரை அதிரடியாக மாற்றும் பா.இரஞ்சித்?

First Published | Mar 7, 2023, 7:35 AM IST

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தற்போது அவர் இயக்கி வரும் தங்கலான் போன்ற திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை.

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பா.இரஞ்சித். இவர் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த பா.இரஞ்சித் அடுத்ததாக கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இதன்பின் ரஜினியுடன் கூட்டணி அமைத்த பா.இரஞ்சித், அடுத்தடுத்து அவரை வைத்து காலா, கபாலி என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இதன்பின் பா.இரஞ்சித் இயக்கிய படம் தான் சார்பட்டா பரம்பரை. ஆர்யா நாயகனாக நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியா துஷாரா விஜயன் நடித்திருந்தார். மேலும் பசுபதி, ஜான் கொகேன், சந்தோஷ் பிரதாப், ஜி.எம்.சுந்தர், சஞ்சனா, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவாகி இருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து இருந்தார்.

Tap to resize

சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் முக்கிய பங்காற்றி இருந்தன. அட்டக்கத்தியில் தொடங்கி சார்பட்டா வரை சுமார் 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வந்த பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி கடந்த 2021-ம் ஆண்டு முறிவை சந்தித்தது. என்ஜாய் எஞ்சாமி பாடலின் மூலம் அறிவு - சந்தோஷ் நாராயணன் இடையே ஏற்பட்ட மோதல் தான் இவர்களின் கூட்டணி பிரிந்ததற்கு முக்கிய காரணம்.

இதையும் படியுங்கள்... மருந்து வாங்க கூட காசு இல்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர் விஏ துரையிடம் 25 லட்சத்தை அபேஸ் செய்த இயக்குனர் பாலா!

அதன்பின் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது மற்றும் தற்போது அவர் இயக்கி வரும் தங்கலான் போன்ற திரைப்படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை. இந்நிலையில், நேற்று திடீரென சார்பட்டா படத்தின் 2-ம் பாகம் உருவாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் இயக்குனர் பா.இரஞ்சித். அதில் முதல் பாகத்தில் பணியாற்றிய பிரபலங்கள் இதில் பணியாற்றுவதாக குறிப்பிட்டு இருந்தாலும், சந்தோஷ் நாராயணனின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை.

இதன்மூலம் சார்பட்டா 2 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு பதிலாக யாரை இசையமைக்க வைக்க போகிறார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சந்தோஷ் நாராயணன் இல்லாத சார்பட்டா 2 எப்படி இருக்கப் போகிறது என்பது தான் நெட்டிசன்களின் குமுறலாக உள்ளது. சார்பட்ட முதல் பாகத்திற்கு முதுகெலும்பாக இருந்ததே இசை தான், அந்த இசை 2-ம் பாகத்தில் இடம்பெறாது என்பது அறிந்த நெட்டிசன்கள், தயவு செய்து இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றுமாறு பா.இரஞ்சித்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பெண்ணால் எதுவும் முடியும்... சோதனைகளை கடந்து தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பெண் இயக்குனர்கள்!

Latest Videos

click me!