இந்த சீரியல்கள் எல்லாம் சமுத்திரக்கனி இயக்கியதா?
இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சமுத்திரக்கனி, உன்னை சரணடைந்தேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து சசிகுமாரை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய நாடோடிகள் திரைப்படம் தான் சமுத்திரக்கனிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களை இயக்கினார். இப்படங்கள் சரிவர போகாததால், இயக்கத்துக்கு ரெஸ்ட் விட்டு நடிகராக களமிறங்கினார் சமுத்திரக்கனி.
நடிகராக பிசியான சமுத்திரக்கனி
அந்த வகையில் தமிழில் சாட்டை, காப்பான், நம்ம வீட்டு பிள்ளை, சில்லுக்கருப்பட்டி, விநோதய சித்தம் ஆகிய படங்களில் சமுத்திரக்கனியின் நடிப்பு பாராட்டப்பட்டது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் செம பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அங்கு ஹீரோயின் இல்லாத படத்தை கூட பார்க்கலாம். ஆனால் சமுத்திரக்கனி இல்லாத படங்களை பார்க்க முடியாது என சொல்லும் அளவுக்கு டோலிவுட்டின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டார் சமுத்திரக்கனி.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் என்னுடைய Lifetime Achievement – சமுத்திரக்கனி!
செல்வி சீரியல்
சமீபத்தில் கூட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இரண்டு பிரம்மாண்ட படங்களான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகியவற்றில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். விரைவில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்கும் படத்திலும் சமுத்திரக்கனி நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமுத்திரக்கனி தான் இயக்கிய தொலைக்காட்சி தொடர்கள் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார்.
தங்க வேட்டை
அதில் அவர் கூறியதாவது : “நான் 3 ஆயிரம் எபிசோடுக்கு மேல் டைரக்ட் பண்ணி இருக்கிறேன். முதன்முதலில் நான் இயக்கிய சீரியல் பெயர் அண்ணி. ஜெயா டிவியில் ஒளிபரப்பான முதல் மெகா சீரியலும் அதுதான். அந்த சீரியல் 350 எபிசோடுக்கு ஓடுச்சு. அது முடிந்த பின்னர் சகானா சீரியலை இயக்கினேன். அதன்பின்னர் சன் டிவியில் ராதிகா நடித்த செல்வி, அரசி ஆகிய சூப்பர் ஹிட் சீரியல்களையும் நான் தான் இயக்கினேன். இதுதவிர ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய தங்க வேட்டை நிகழ்ச்சியையும் டைரக்ட் பண்ணினேன். பின்னர் ஜெயா டிவியில் அலைபாயுதே, கலைஞர் டிவியில் தேன்மொழி ஆகிய சீரியல்களையும் இயக்கினேன்” என கூறி இருக்கிறார். அவரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் இவர் இயக்கிய சீரியல்களா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... யாருக்கும் தெரியாமல் சமுத்திரக்கனி செய்து வரும் நல்ல விஷயங்கள் என்ன தெரியுமா?