Samantha Ruth Prabhu Speech : ஐஐஎம் இந்தியா தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட நடிகை சமந்தா, சினிமாவில் நடிகையாக நீண்ட காலம் நீடிக்க முடியாது என கூறி இருக்கிறார்.
தென்னிந்திய ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் தெலுங்கு ரீமேக்கான 'யே மாய சேசாவே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சமந்தா, தற்போது தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். நடிகையாக இருப்பது நீண்ட காலம் நீடிக்காது என்றும், அதன்மூலம் கிடைக்கும் புகழ் வெளிச்சம், பாப்புலாரிட்டி போன்றவை சிறிது காலத்துக்கு மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
24
புகழ் நிரந்தரமல்ல - சமந்தா
ஐஐஎம் இந்தியா தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட சமந்தா அதில் பேசியிருப்பதாவது : "நடிகை வாழ்க்கை நீண்டதல்ல. புகழ், ரசிகர் பட்டாளம் போன்றவை சிறிது காலம் மட்டுமே. இவை அனைத்தும் நம்முடையது என்று நாம் நினைக்கலாம். ஆனால், ஒரு நடிகையாக உயரும்போது, அதற்குப் பின்னால் நிறைய அதிர்ஷ்டமும், அருளும் உள்ளது. அது நம்முடைய கடின உழைப்பு மட்டுமல்ல. எனவே, ஒரு நடிகையாக எனது வாழ்க்கையை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினேன். அதை உணர்ந்துகொள்வது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது." என அவர் கூறினார்.
34
தயாரிப்பாளராக களமிறங்கிய சமந்தா
2023 இல் வெளியான குஷி தான் சமந்தாவின் கடைசி படம். இந்த ஆண்டு வெளியான 'சுபம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை சமந்தாவே தயாரித்தார். இதுவே அவரது முதல் தயாரிப்பு. 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்ற வெப் சீரிஸில் வருண் தவானுடன் இணைந்து நடித்திருந்தார். ராஜ் & டிகே இயக்கிய இந்தத் தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்தத் தொடரின் இரண்டாம் பாகம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தொடரில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் உடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு இருப்பது கடந்த 2022ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதனால் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்தார் சமந்தா. தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா, மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அவர் கைவசம் பாலிவுட் படங்கள் சில உள்ளன. விரைவில் தமிழ் படத்திலும் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். கைதி 2 படத்தில் சமந்தா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.