Published : Apr 27, 2026, 12:34 PM ISTUpdated : Jul 12, 2026, 05:46 PM IST
S Janaki Crying in Song Recording : தமிழ் திரையுலகில் தனது வசீகரக் குரலால் பலரையும் கவர்ந்திழுத்த எஸ் ஜானகி, ஒரு பாடலை பாட முடியாமல் தேம்பித் தேம்பி அழுதுள்ள சம்பவம் நடந்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் இருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இளையராஜா. கிராமத்து மண்வாசனை பாடல்கள் தொடங்கி அனைத்து ஜானகர்களிலும் இசையமைத்து மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக ரசிகர்களை வைத்திருக்கும் இசையமைப்பாளராக வலம் வருகிறார். சோகம், துக்கம், மகிழ்ச்சி, அழுகை, ஆனந்தம் என எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் இளையராஜா இசையை நாடுகின்றனர். சிலர் இரவில் தூங்குவதற்கு கூட இளையராஜா இசையை கேட்பது வழக்கம்.
இளையராஜா இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரின் பல படங்களுக்கு எஸ் ஜானகியை பாட வைத்துள்ளார். எஸ் ஜானகியின் குரல் அவரது மண்வாசனை இசைக்கு ஏற்றவாறு இருந்ததால் ஒரு கட்டத்தில் இளையராஜா ஜானகியை தனது ஆஸ்தான பாடகியாக மாற்றிக் கொண்டார். இளையராஜாவுக்கு பல வெற்றிப் பாடல்களை கொடுத்த எஸ் ஜானகி அவர் இசையமைத்த ஒரு பாடலை பாட முடியாமல் தேம்பி தேம்பி அழுதுள்ள சம்பவம் நடந்திருக்கிறது. இந்த தகவலை எஸ் ஜானகியே பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
பொதுவாக ஜானகி மேடைகளிலோ அல்லது ரெக்கார்டிங் தியேட்டர்களில் பாடும் பொழுது உணர்ச்சிவசப்பட மாட்டார். அவர் உடல் கூட அசையாது. ஒரே இடத்தில் நின்றபடி வாயை மட்டுமே அசைத்துப் பாடுவார். ஆனால் அப்படி இருந்தவரையே இளையராஜாவின் ஒரு பாடல் அசைத்துப் பார்த்துவிட்டது. அந்த பாடல் ‘அச்சாணி’ என்கிற திரைப்படத்தில் வெளியான “மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்..” என்கிற பாடல்தான். 1978 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் முத்துராமன் லட்சுமி, அசோகன், சுருளிராஜன், மனோரமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்த படத்தில் உருவான நான்கு பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக ஜானகியின் பாடலில் உருவான “மாதா உன் கோவிலில்..” பாடல் தற்போது வரை கோவில் திருவிழாக்களில் ஒலித்து வருகிறது. இந்தப் பாடல் குறித்து பேட்டி அளித்த இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இந்தப் பாடல் 3 மணி நேரத்தில் உருவானதாக கூறியிருந்தார். இந்த பாடலை ரெக்கார்டிங் தியேட்டரில் ஜானகி பாடும் பொழுது ஜானகி அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுள்ளார். வாலியின் வரிகள், இசைஞானியின் இசை ஆகியவை அவரை உணர்ச்சிபூர்வமாக மாற்றியுள்ளது. பாடிக் கொண்டிருக்கும் பொழுதே உணர்ச்சி வசப்பட்டு ஜானகி தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார்.
55
ஜானகியை அழவைத்த வரிகள்
இயேசுவை பெறாமல் பெற்ற தாயாக மேரி மாதா இருந்ததை குறிக்கும் வண்ணம் “பிள்ளை பெறாத பெண்மை தாயானது, அன்னை இல்லாத மகனை தாலாட்டுது..” என்ற வரிகளை கேட்டபோது ஜானகி உடைந்து போயிருக்கிறார். திடீரென அவர் பாட்டை நிறுத்தியதும் ஸ்டூடியோவில் இருந்த அனைவரும் ஜானகியை பார்த்து ஏன் என்ன ஆனது என்று கேட்டுள்ளனர். அப்போது இந்த வரிகளை தன்னால் பாட முடியவில்லை. இந்த வரிகள் என்னை ஏதோ செய்கிறது என்று கூறி அழுதுள்ளார்.
பின்னர் அவரை இளையராஜா சமாதானம் செய்து, அவருக்கு சில மணி நேரங்கள் ஓய்வு கொடுத்து மீண்டும் இந்த பாடலை இளையராஜா ரெக்கார்ட் செய்துள்ளார். இந்த பாடலை பாடும் பொழுது எப்படி ஜானகி கண்ணீர் விட்டு அழுதாரோ, அதே போல் இந்த பாடலை கேட்கும் பலரும் கண் கலங்குவது வழக்கம் தான். இதுவே இந்த பாடலின் மிகப்பெரும் வெற்றியாக மாறியது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.