பாடகி எஸ்.ஜானகிக்கு சிறுவயதில் இருந்தே படிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் அவரது பெற்றோர் அவரை தொடர்ந்து கண்டித்து வந்தனர். அதன்பின் பலமுறை சொல்லியும் படிப்பு வராததால், உன் தலையெழுத்தை நீயே தீர்மானித்துக்கொள் என சொல்லிட்டார்களாம்.
பாடகிக்கு படிப்பை விட இசையின் மீது அதீத ஆர்வம் இருந்ததை அறிந்த அவரது தந்தை ராமமூர்த்தி, தன் ஊரில் வசித்த பைடிசாமி என்கிற நாதஸ்வர வித்வானிடம் ஜானகியை இசை கற்றுக்கொள்ள அனுப்பி வைத்தார்.
ஜானகி, சங்கீதம் கற்றுக்கொள்ள சென்றபோது அவருக்கு இயல்பாகவே சங்கீத ஞானம் இருப்பதை பார்த்து வியந்துபோன பைடிசாமி, உனக்கு சங்கீதம் கற்றுத்தர தேவையில்லை, நீயே சங்கீதம் தான் என பாராட்டியதோடு 7 மாதத்திலேயே வாழ்த்தி அனுப்பிவைத்தார்.
அகில இந்திய வானொலி நடத்திய பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு வென்ற பாடகி ஜானகியை இவரது தாய்மாமன் சந்திரசேகர் சென்னைக்கு அனுப்பி வைத்தார். 20 வயதிலேயே குடும்பத்துடன் சென்னைக்கு வந்த ஜானகி கோரஸ் பாடகியாக வேலை பார்த்தார்.
சிங்கார வேலனே தேவா, சின்னத்தாய் அவள், ஊரு சனம் தூங்கிருச்சு, காற்றில் எந்தன் கீதம் என இளையராஜா இசையில் என்னற்ற ஹிட் பாடல்களைப் பாடிய பெருமைக்கு சொந்தக்காரராக இருந்தார் ஜானகி.
பாடகி ஜானகி 1980-களில் புகழின் உச்சியில் இருந்தபோது, ஒரே நாளில் 15-க்கும் அதிகமான பாடி திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வந்த ஜானகி, இந்தியில் அதிகமான பாடல்களைப் பாடிய முதல் தென்னிந்திய பாடகி என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார்.
பாடகி ஜானகி, கடவுள் நம்பிக்கை கொண்டவர். கிருஷ்ணரின் தீவிர பக்தையான இவர் ஆடம்பரத்தை விரும்பாதவர். நகைகள் எதுவும் அணிந்துகொள்ள மாட்டார்.