அந்த நோய் வந்ததால் தான் மெலிந்து போனேன்... நான்கே மாதத்தில் மீண்டு வந்தது எப்படி? - மனம் திறந்த ரோபோ சங்கர்

First Published | Jun 12, 2023, 8:38 AM IST

உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்துபோன ரோபோ சங்கர் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.

கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் பேமஸ் ஆக இருந்த ரோபோ சங்கருக்கு படிப்படியாக வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைத்து, தற்போது கோலிவுட்டில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரோபோ சங்கர். அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அசத்திய ரோபோ சங்கர், சமீபகாலமாக உடல் எடை குறைந்து மெலிந்த தோற்றத்துக்கு மாறினார்.

ரோபோ சங்கர் மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வந்தன. இந்த நிலையில், தன்னுடைய உடல்நிலை குறித்தும், தான் திடீரென மெலிந்து போனது ஏன் என்பது குறித்தும் நடிகர் ரோபோ சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்ல போகிறாரா தளபதி விஜய்...?

Tap to resize

அதன்படி அவர் கூறியதாவது : “உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக டயட்டில் இருந்த போது எனக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துச்சு. அந்த நோய் வந்ததன் காரணமாக தான் உடல் எடை வேகமாக குறைந்துவிட்டது. நல்ல நேரமாக எனக்கு நல்ல மருத்துவர்கள் அமஞ்சாங்க. என்னை நன்றாக பார்த்துக்கிட்டாங்க. என் மனைவி, என் குழந்தைகள் மற்றும் என்னுடைய நண்பர்கள் எல்லாருமே நல்லபடியா பார்த்துக்கொண்டார்கள். அதனால தான் சீக்கிரமா பழைய நிலைக்கு திரும்ப முடிஞ்சது.

அதோடு, நாலு மாசமா நான் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்த்ததால் தான் சீக்கிரம் குணமடைய முடிந்தது. நான் எத்தனையோ பேரை சிரிக்க வைத்து அவர்களது மனக்கஷ்டத்தை போக்கி இருக்கிறேன். ஆனால் என்னுடைய கஷ்டத்தை போக்கியது காமெடி ஷோக்கள் தான். அதிலும் ராமர் காமெடியை அடிச்சுக்கவே முடியாது. அவரின் காமெடிகளை பார்த்து பெட்டில் உருண்டு உருண்டு சிரித்திருக்கிறேன்.

எனக்கு காமெடி பண்ண மட்டுமல்ல, யார் காமெடி பண்ணாலும் அதை ரசிக்கவும் தெரியும். அதனால் தான் கடந்த நாலு மாசமா காமெடி நிகழ்ச்சிகளை பார்த்து நான் திரும்பவும் பழைய நிலைக்கு வந்திருக்கிறேன். என்னுடைய உடல்நிலை குறித்து யூடியூப்ல தப்பு தப்பா போட்டாங்க, அதையெல்லாம் பார்த்து நான் சிரிச்சிட்டு தான் இருந்தேன். தற்போது வெளியே செல்லும் போதெல்லாம் என்னை பார்ப்பவர்கள், நீங்க பழையபடி வரணும்ணு வேண்டிக்கொண்டதாக சொல்கிறார்கள். மக்களின் அந்த அன்பைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என ரோபோ சங்கர் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... இனிமே வாடிவாசலுக்காக காத்திருக்க முடியாது... வெற்றிமாறனால் பொறுமை இழந்து நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு

Latest Videos

click me!