தமிழ் திரைவானில் என்றென்றும் துருவ நட்சத்திரமாக மிளிரும் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் நினைவு தினம் இன்று

கதாநாயகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் திரையுலகை இயக்குனர்கள் வசம் எடுத்துச் சென்ற கே.பாலச்சந்தரின் நினைவு நாளான இன்று, அவரது திரையுலக பங்களிப்பை பற்றிய சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் என அழைக்கப்பட்டவர் கே.பாலச்சந்தர். இவர் 1930-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் பிறந்தார். சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்து வந்த பாலச்சந்தர், ஆரம்பத்தில் கணக்காளராக வேலை பார்த்துள்ளார்.

இவர் நாடகங்கள் மூலம் திரைத்துறையில் கால்பதித்தார். நீர்க்குமிழி தொடங்கி பொய் வரை இவர் மொத்தம் 101 படங்களை இயக்கினார். எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக கோலிவுட்டில் காலடி எடுத்துவைத்த கே.பாலச்சந்தர், கடைசி வரை எம்.ஜி.ஆருக்கு ஒரு படம் கூட இயக்கவில்லை.

திரைப்படங்கள் மட்டுமல்லாது சில தொலைக்காட்சி தொடர்களையும் பாலச்சந்தர் இயக்கி இருக்கிறார். திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என பல துறைகளிலும் முத்திரை படைத்த பாலச்சந்தர், 1965-ம் ஆண்டு தான் இயக்கிய முதல் திரைப்படமான நீர்க்குமிழியிலேயே வித்தியாசமான திரைக்கதை மூலம் தனது முத்திரையை ஆழமாக பதித்தவர் ஆவார்.

அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். மகாகவி பாரதியாரின் கவிதைகள் மீது தீராத பற்று கொண்ட பாலச்சந்தர், அவரின் வரிகளுக்கு திரை வடிவம் கொடுத்தார். சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கல்ல என்பதை தீவிரமாக நம்பிய அவர், தன் படங்களில் சமுதாயத்திற்கான நற்செய்தி இருக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.

இதையும் படியுங்கள்... 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள... பழம்பெரும் வில்லன் நடிகர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்


Remembering Legendary director K Balachander on his Death anniversary

தன்னுடைய படங்களில் சமூகம் மற்றும் குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களை பாலச்சந்தர் தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து பதிவு செய்தார். தமிழ் திரையுலகில் இயக்குனர் சிகரம் என புகழப்படும் கே.பாலச்சந்தர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம் என பிறமொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

குறிப்பாக இவர் இந்தியில் இயக்கிய ‘ஏக் துஜே கேலியே’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதோடு மட்டுமின்றி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது. 

நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், ரஜினிகாந்த், கமலஹாசன், ஏ.ஆர்.ரகுமான், சுஜாதா, ஸ்ரீபிரியா, விவேக், டெல்லி கணேஷ், பிரகாஷ் ராஜ் என பல்வேறு திரையுலக பிரபலங்களை அறிமுகப்படுத்திய பெருமை பாலச்சந்தரையே சேரும்.

இப்படி பல்வேறு நட்சத்திரங்களை உருவாக்கிய பாலச்சந்தர், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி காலமானார். இவர் மறைந்தாலும் என்றென்றும் தமிழ் திரைவானில் ஒரு துருவ நட்சத்திரமாக இருந்து வருகிறார். 

இதையும் படியுங்கள்... சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு... விஜய் சேதுபதி, சாய் பல்லவி உள்பட விருது வென்றவர்களின் முழு விவரம் இதோ

Latest Videos

click me!