சென்னை சர்வதேச திரைப்பட விழா நிறைவு... விஜய் சேதுபதி, சாய் பல்லவி உள்பட விருது வென்றவர்களின் முழு விவரம் இதோ

First Published Dec 23, 2022, 10:09 AM IST

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கார்கி, இரவின் நிழல், மாமனிதன், பிகினிங், நட்சத்திரம் நகர்கிறது, கிடா, கசட தபற, ஆதார் ஆகிய தமிழ் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 15-ந் தேதி தொடங்கியது. இதில் 51 நாடுகளைச் சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் தமிழ் பிரிவில் 12 படங்களும், இந்தியன் பனோரமா பிரிவில் 3 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த திரைப்பட விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் நிறைவு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், வெற்றிபெற்ற படங்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதில் திரையிடப்பட்ட கார்கி, இரவின் நிழல், மாமனிதன், பிகினிங், நட்சத்திரம் நகர்கிறது, கிடா, கசட தபற, ஆதார் ஆகிய தமிழ் படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக சிறந்த நடிகருக்கான விருது மாமனிதன் படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கும், கிடா படத்தில் நடித்த நடிகர் பூ ராமுவுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்... 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள... பழம்பெரும் வில்லன் நடிகர் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

அதேபோல் சூர்யா தயாரிப்பில் வெளியான கார்கி படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அவர் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனதால், அவருக்கு பதில் கார்கி படத்தின் இயக்குனர் கவுதம் இந்த விருதை பெற்றுக்கொண்டார். அதேபோல் சிறப்பு சான்றிதழ் விருது கருணாஸ் நடித்த ஆதார் படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான முதல் பரிசு கிடா படத்துக்கும், இரண்டாம் பரிசு சிம்புதேவன் இயக்கிய கசடதபற படத்துக்கும் கிடைத்தது.

பார்த்திபனின் இரவின் நிழல் படத்துக்கு 2 விருதுகள் கிடைத்தன. அதன்படி சிறப்பு நடுவர் விருது இயக்குனர் பார்த்திபனுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ஆர்தர் வில்சனுக்கும் வழங்கப்பட்டது. பா.இரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு ஒலிப்பதிவு செய்த அந்தோணி பிஜே ரூபனுக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் சிறந்த படத்தொகுப்பாளர் விருது பிகினிங் படத்தில் பணியாற்றிய சிஎஸ் பிரேமுக்கு வழங்கப்பட்டது. இதேபோல் வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குனர் பாரதிராஜாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டில் இது புதுசு... முதன்முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா..?

click me!