
மனைவியை இழந்த பிரபு, தனது மகன் வெற்றி மற்றும் மகளுடன் ராமநாதபுரம் அருகே ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். சிறுவயது முதலே தனது மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள பிரபு, அவரை செல்லமாக வளர்த்து வருகிறார். மகனை வேலைக்கு கூட அனுப்ப மறுக்கிறார். இந்த நிலையில் அதே ஊரில் இருக்கும் கோமல் குமார் பல சட்டவிரோத செல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தை உரியவரிடம் கொண்டு சேர்க்கும் பணியை, சட்ட விரோதமாக ஆட்களை வைத்து செய்து வருகிறார். அவரின் வலது கையாக லிவிங்ஸ்டன் வேலை பார்த்து வருகிறார்.
அதே ஊரில் இன்னொரு தாதாவாக இருக்கும் ஆர்.வி உதயகுமார் கோமல் குமார் இடத்தை பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். கோமல் குமாரின் வலது கையாக இருக்கும் லிவிங்ஸ்டனை வைத்து அவரை வீழ்த்த திட்டம் தீட்டுகிறார். இதற்கிடையே வெற்றி, பிரபுவுக்குத் தெரியாமல் கோமல் குமாரிடம் வேலைக்கு செல்கிறார். பணத்துடன் சென்ற வெற்றியை தாக்கி விட்டு அவரிடமிருந்து பணம் வழிப்பறி செய்யப்படுகிறது. இதனால் கோமல் குமார் வெற்றியை சிறை பிடித்து விடுகிறார். இதை அறிந்த பிரபு வீட்டுப் பத்திரத்தை கோமல் குமாரிடம் கொடுத்துவிட்டு வெற்றியை மீட்டு வருகிறார்.
அதன்பின் என்ன நடந்தது? வெற்றியிடமிருந்து பணத்தை அடித்தது யார்? பணம் என்ன ஆனது? வெற்றி எப்படி மீட்கப்பட்டார்? வீட்டுப் பத்திரத்தை பிரபு எப்படி மீட்டார்? என்பதே படத்தின் மீதிக் கதை. ஒரே மகனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பதிலும், மகன் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பதை கண்டு கொந்தளிக்கும் காட்சிகளிலும் பிரபுவின் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது. மொத்த படத்தையே பிரபு தனி ஒரு ஆளாக தாங்கி நிற்கிறார். இத்தனை நாட்களாக இயல்பான நடிப்பை காட்டி வந்த வெற்றி, இந்த படத்தில் சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடி உள்ளார். நாயகியாக வரும் கிருஷ்ண பிரியா எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
காமெடியை ககையில் எடுத்த இமான் அண்ணாச்சி - தங்கதுரை கூட்டணி ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சில இடங்களில் இருவரும் மக்களை சிரிக்க வைக்க சிரமப்படுகின்றனர். வில்லனான கோமல் குமாருக்கு நாயகனை விட ஏகப்பட்ட பில்டப் காட்சிகள். அவரது வில்லத்தனம் ரசிக்க வைத்தாலும், பில்டப்பை கொஞ்சம் குறைத்திருக்கலாம். லிவிங்ஸ்டன், ஆர்.வி உதயகுமார், மன்சூர் அலிகான் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவும், நவ்பல் ராஜாவின் இசையும் படத்திற்கு கூடுதல் வலுசேர்க்கிறது.
அப்பா மகனுக்கு இடையே நடக்கும் பாசக் கதையை சண்டைக் காட்சிகள், பாடல்கள், காதல் காட்சிகளுடன் இணைத்து காட்ட நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் இதில் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு பார்த்து சலித்த டெம்ப்ளேட்களாகவே இருக்கின்றன. வெள்ளந்தியாக இருக்கும் கிராம மனிதர்களை ஏமாற்றும் வில்லன் கூட்டமும், அதை தொடர்ந்து வரும் ட்விஸ்ட்டும் ரசிக்கும்படியாக இருந்தாலும் படத்தில் பல இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள் படத்தில் சற்று பின்னடைவை ஏற்படுத்துகின்றன.
அளவுக்கு அதிகமான செயற்கைத் தனமும், ஏற்கனவே பார்த்து சலித்த கதைக்களமும் இருப்பதால் ஒரு முழுமையான திரை அனுபவத்தை தர முடியாமல் தடுமாறுகிறது ‘ராஜபுத்திரன்’ திரைப்படம்.