
கர்நாடகாவில் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி ராமோஜி ராவ்-க்கும் ராமா பாய்க்கும் நான்காவது மகனாக பிறந்தார் சிவாஜி ராவ். பெங்களூருவில் கல்வி பயின்ற சிவாஜிராவ், படிப்பில் கவனம் செலுத்தாமல் நடிப்பில் கவனம் செலுத்தினார். படித்து முடித்ததும் அங்கேயே பேருந்து நடத்துனராக பணியாற்றிக் கொண்டே நாடகங்களிலும் நடித்து வந்தார். அவர் முதன்முதலாக 1975 ஆம் ஆண்டு கதா சங்கமா என்ற கன்னட படத்தில் நடித்தார். அதே வருடம் கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்திலும் சிறிய வேடத்தில் நடித்தார்.
தொடர்ந்து நடித்த மூன்று முடிச்சு, புவனா ஒரு கேள்விக்குறி, அவர்கள், 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்கள் ரஜினியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முக்கிய படங்களாக அமைந்தன. வில்லன் கதாபாத்திரம் ஏற்றுக் கொண்டிருந்த ரஜினி நாயகனாக நடித்த முதல் படம் பைரவி, தொடர்ந்து முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ரஜினி சுமாராக மட்டும் தமிழ் பேசுவார். தமிழ் கற்றுக் கொண்டால் உங்களை எங்கேயோ கொண்டு போய் விடுவேன் என்று கே பாலசந்தர் கூறியதற்காக சீக்கிரமாகவே தமிழ் பேச கற்றுக் கொண்டார் ரஜினிகாந்த்.
பில்லா, தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, முரட்டுக்காளை உள்ளிட்ட படங்கள் இவரை ஆக்சன் நாயகனாகவும், தில்லு முல்லு, முத்து போன்ற படங்கள் இவரை நகைச்சுவை நாயகனாகவும் மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. பணக்காரன், வேலைக்காரன், படிக்காதவன், தர்மத்தின் தலைவன், மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்கள் ரஜினியை சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு கொண்டு சென்றன. தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நடித்து இந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தனக்கென தனி முத்திரை பதித்தார் ரஜினிகாந்த்.
அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா போன்ற தொடர் வெற்றி படங்கள் மூலமாக சினிமாவின் வசூல் மன்னனாக உருவெடுத்தார். இதன் மூலம் இயக்குனருக்கான நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளருக்குமான நடிகராக ஜொலித்தார் ரஜினிகாந்த். ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கி கிடந்த தமிழ் சினிமாவின் வணிக எல்லையை உலக அளவில் விரிவு படுத்தியதில் ரஜினி படங்களுக்கு பெரும் பங்கு உண்டு. குறிப்பாக ஜப்பானிய மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான முத்து படம் அதுவரை வேற அந்த இந்திய நடிகரும் வெளிநாடுகளில் செய்யாத மகத்தான சாதனையை நிகழ்த்தியது.
கருப்பு வெள்ளை காலத்தில் களம் கண்ட ரஜினி, டிஜிட்டல், அனிமேஷன், 3டி என நான்கு வெவ்வேறு தொழில்நுட்பத்தில் நடித்து விட்டார். இது இந்திய அளவில் வேறெந்த நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய கௌரவம். 50 ஆண்டு காலமாக தமிழ் திரை உலகில் கோலோச்சி வரும் ரஜினிகாந்த், கலைமாமணி தொடங்கி பத்ம விபூஷன் வரை எண்ணற்ற உயரிய விருதுகளை வாங்கியுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் மேக்கப் இல்லாமல் தோன்றுவது, உள்ளதை உள்ளபடி சொல்வது போன்ற குணங்களுமே சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இன்றும் ரஜினியை பலருக்கும் பிடிக்க முக்கிய காரணம். திறமையை மட்டுமே வழிச்செலவுக்கு வைத்துக் கொண்டு உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் கலை துறையில் வெற்றியை முகர்ந்தவர் ரஜினிகாந்த் என்றால் அது மிகையல்ல.
சினிமாவில் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் ரஜினிகாந்த், தற்போது 75 வயதிலும் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்கிறார். இவர் தற்போது ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளமாக வாங்குகிறார். ரஜினிகாந்த் எளிமையின் சிகரமாக இருந்தாலும் அவரின் சொத்து மதிப்பு மலையளவு இருக்கிறது. சுமார் 430 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கிறார் ரஜினி. இவருக்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா ஒன்று உள்ளது. சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட்டில் அதிகம் முதலீடு செய்துள்ள ரஜினிக்கு, சொந்தமாக கல்யாண மண்டபமும் உள்ளது. இவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ, பென்ஸ், இன்னோவா போன்ற சொகுசு கார்களும் இருக்கின்றன.