நான் வெறி எடுத்து பாட்டு எழுதிய படம் படையப்பா..! சர்ச்சை கவிஞர் வைரமுத்து அதிர்ச்சி கருத்து

Published : Dec 12, 2025, 09:38 AM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆவதையொட்டி, அப்படத்தின் பாடல்களை தான் வெறியெடுத்து எழுதியதாக கூறி இருக்கிறார் வைரமுத்து.

PREV
14
Vairamuthu shares Padayappa Movie Song experience

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினிகாந்த் பிறந்தநாள் என்றாலே அன்றைய தினம் அவர் நடித்த பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுவது கடந்த சில வருடங்களாக ஒரு டிரெண்ட் ஆக மாறி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரஜினி நடித்த படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 1999-ல் திரைக்கு வந்த இப்படம், ரீ மாஸ்டரிங் செய்யப்பட்டு 4K தொழில்நுட்பத்தில் புத்தம் புது பொழிவுடன் திரைக்கு வருகிறது.

24
படையப்பா ரீ-ரிலீஸ்

ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படங்களில் படையப்பாவும் ஒன்று. அப்படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் பாடல்களும் ஒரு முக்கிய காரணம். அதில் இடம்பெறும் வெற்றிக் கொடிகட்டு பாடல் இன்றைக்கு கேட்டாலும் புத்துணர்ச்சி கொடுக்கும். அந்த அளவுக்கு அப்பாடலை தன்னுடைய பாடல் வரிகளால் மெருகேற்றி இருந்தார் கவிஞர் வைரமுத்து. இந்த நிலையில், இன்று படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆவதையொட்டி, அப்படத்தின் பாடல்களை தான் வெறியெடுத்து எழுதியதாக கூறி இருக்கிறார் வைரமுத்து.

34
வைரமுத்து சொன்ன ரகசியம்

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்புக் குறையாமல் வெளியாகிறது படையப்பா. மூங்கில் குழாயில் அடைத்து மூடிப் புதைக்கப்பட்ட தேன் கால்நூற்றாண்டுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்படுகையில் வீரிய பானமாய் வெளிப்படுவது மாதிரி, காலம்கடந்தும் கலக்கவருகிறது படையப்பா.

நான் வெறியெடுத்துப் பாட்டெழுதிய படங்களுள் படையப்பாவும் ஒன்று. 'வெற்றிக்கொடிகட்டு' பாடல் எப்போது கேட்டாலும் என் அத்துணை நரம்புகளும் பாம்புகளாய்ப் படமெடுக்கும். மறக்க முடியாத ஒரு நிகழ்வு சொல்கிறேன்: படத்தின் முதல் பிரதி முதலமைச்சருக்குப் போட்டுக் காட்டப்படுகிறது. விஜயராகவா சாலையில் தேவி ஸ்ரீதேவி குறுந்திரையரங்கில் திரையீடு நிகழ்கிறது.

44
ரஜினி வழங்கும் பாசப் பரிசு படையப்பா

அந்நாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், மேலும் சில அமைச்சர்கள், ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் நான் மற்றும் சிலர் படம் பார்க்கிறோம். படம் நிறைந்தது, கலைஞர் வெளியே வருகிறார்; யாரும் இல்லை, தினத்தந்தி நிருபர் கங்காதரன் மட்டும் எப்படியோ துப்பறிந்து வந்துவிடுகிறார். “ஐயா! படம் எப்படி இருக்கிறது” என்று ஒரு வினாவை வீசுகிறார்.

சற்றும் இடைவெளி இல்லாமல் “படையப்பா; பழைய சாதனைகளை உடையப்பா என்றிருக்கிறது” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறுகிறார் கலைஞர். அவர் வாக்குப் பொய்க்குமா? பலித்தது. தன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ரஜினி வழங்கும் பாசப் பரிசு படையப்பா. தங்கம் பழையதாகலாம்; விலை குறையுமா?" என உணர்ச்சி பொங்க எழுதி பதிவிட்டிருக்கிறார் வைரமுத்து.

Read more Photos on
click me!

Recommended Stories