RRR Review : ராஜமவுலியின் பாகுபலி மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? - ஆர்.ஆர்.ஆர் படத்தின் விமர்சனம்

First Published Mar 25, 2022, 12:39 PM IST

RRR Review : ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் விமர்சனம்.

அதிலாபாத் என்கிற காட்டுப்பகுதியில் தன் இனமக்களின் காப்பாளனாக இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். இவரது இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை வெள்ளைக்காரர்கள் வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்கின்றனர். இதையறிந்த ஜூனியர் என்.டி.ஆர். அந்தப் பொண்ணை வெள்ளைக்காரர்களிட இருந்து மீட்க களத்தில் இறங்குகிறார். 

இவரை உயிரோடவோ அல்லது பிணமாகவோ பிடித்துக் கொண்டு வந்தால் பதவி உயர்வு கொடுக்கப்படுக் எனக்கூறி போலீஸ் அதிகாரியான ராம்சரணை ஆங்கிலேயர்கள் களத்தில் இறக்கி விடுகின்றனர். இதன்பின் என்ன ஆனது? ஜூனியர் என்.டி.ஆரை ராம்சரண் கைது செய்தாரா? ஜூனியர் என்.டி.ஆர் ஆங்கிலேயர்கள் வசம் உள்ள தன் இனத்தை சேர்ந்த சிறுமியை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகர்கள் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் இப்படத்திற்காக கடினமாக உழைத்துள்ளது திரையிலும் பிரதிபலிக்கிறது. இருவருக்கும் இருக்கும் ரசிகர் பட்டாளத்தை உணர்ந்து படு மாஸான ஓப்பனிங் சீனை வைத்துள்ளார் ராஜமவுலி. முதல் பாதி முழுவதும் ஜூனியர் என்.டி.ஆரின் ஆதிக்கமும், இரண்டாம் பாதி முழுவதும் ராம்சரணின் கதாபாத்திரத்திற்கு ஆதிக்கம் கொடுத்து இரு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தி உள்ளார் இயக்குனர் என்றே சொல்லலாம்.

காப்பாளனாக வரும் ஜூனியர் என்.டி.ஆர், அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். நடிப்பிலும் பின்னி பெடலெடுத்துள்ளார். தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மறுபுறம் ராம்சரண் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதற்கான மிடுக்கான தோற்றத்துடன் கச்சிதமாக பொருந்தி உள்ளார். இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். நாட்டு நாட்டு பாடலுக்கு இவர்கள் ஆடிய நடனத்தை பார்த்தால் டான்ஸ் தெரியாதவர்கள் கூட எழுந்து ஆடி விடுவார்கள் அந்த அளவுக்கு இருந்தது.

இவர்களை இருவரைத் தவிர்த்து மற்றுமொரு முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது அஜ்ய் தேவ்கனுடையது தான். அவர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்து அசத்தி உள்ளார். ஆலியா பட், ஸ்ரேயா சரண் இருவரும் வாமா மின்னல் என்பது போல் சட்டென தோன்றி மறைகிறார்கள். அவர்களுக்கும் கொஞ்சம் முக்கியத்தும் கொடுத்து இருக்கலாம். சமுத்திரக்கனியும் சின்ன ரோலில் வந்து செல்கிறார். 

rrr movie review,

பாகுபலி என்கிற பிரம்மாண்ட படைப்பை கொடுத்த ராஜமவுலி, இப்படத்தை அதைவிட பிரம்மாண்டமாக எடுத்திருந்தாலும், திரைக்கதையில் சற்று கோட்டை விட்டுள்ளார். பரப்பாக செல்லும் திரைக்கதை சில இடங்களில் தொய்வை சந்திப்பது தான் சற்று நெருடலாக உள்ளது. மேலும் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாமோ என என்ன தோன்றுகிறது.

இப்படத்தில் வலுவான வில்லன் கதாபாத்திரம் இல்லாததும் ஒரு பின்னடைவு. மற்றபடி டெக்னிக்கலாக இப்படம் தனித்து நிற்கிறது. இப்படத்திற்காக போடப்பட்ட செட் நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறது. குறிப்பாக சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு உள்ளன. இடைவேளைக்கும் முன் வரும் சண்டைக் காட்சியெல்லாம் வாவ் ரகம் தான்.

இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது கீரவாணியின் பின்னணி இசை மற்றும் கேகே செந்தில் குமாரின் ஒளிப்பதிவும் தான். கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், அது காட்சிப்படுத்தப்பட்ட விதமும் அருமை. பின்னணி இசையிலும் அவர் மாஸ் காட்டி உள்ளார். கேகே செந்தில் குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை உணர முடிகிறது.

ஆகமொத்தம் ராஜமவுலியின் பாகுபலி மேஜிக் ஆர்.ஆர்.ஆர்-ல் மிஸ்ஸிங் என்று தான் சொல்ல வேண்டும். படமும் ஓகே ஓகே ரகம் தான், ஒரு முறை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... RRR :இது மிகப்பெரிய குற்றம்... இப்படியொரு மோசமான படத்தை எடுத்த ராஜமவுலியை ஜெயில்ல போடனும்- பிரபல நடிகர் டுவிட்

Latest Videos

click me!